பார்வையற்ற பட்டதாரி பெண்கள் 3வது நாளாக உண்ணாவிரதம்
சென்னை: ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து காத்திருக்கும் பார்வையற்ற பட்டதாரிகளுக்கு உடனடியாக ஆசிரியர் பணி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 9 நாட்களாக சென்னையின் பல்வேறு இடங்களில் சாலை மறியல், உண்ணாவிரதம் என பல்வேறு கட்ட போராட்டங்களில் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் ஈடுபட்டு வருகின்றனர். கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி நுங்கம்பாக்கத்தில் உள்ள டிபிஐ வளாகத்தில் முதுகலை பட்டதாரி பெண்கள் 7 பேர் இன்று 3வது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவாக 50க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் இன்று ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், வளாகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இது குறித்து பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கத்தை சேர்ந்த ராஜா கூறியதாவது:9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று 10 நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். மகளிர் நலன்களை காக்கும் அரசு என்று சொல்லும் தற்போதைய அரசு, தொடர்ந்து 3வது நாளாக உண்ணாவிரதம் இருக்கும் பெண்களை கண்டுகொள்ளவில்லை. அவ்வாறு இருக்கும்போது இது எப்படி மகளிர் நலன் காக்கும் அரசாக இருக்க முடியும்? இன்று ஒரு நாள் அமைதியான முறையில் உண்ணாவிரதம் இருப்போம். நல்ல முடிவு அரசு தரப்பில் எடுக்கவில்லை எனில் நாளை முதல் சாலை மறியல் உள்ளிட்ட பலகட்ட போராட்டங்களில் ஈடுபடுவோம் என்றார்.