முதுமக்கள் தாழியில் மண்டை ஓடு, எலும்பு துறையூர் அருகே பரபரப்பு
துறையூர்: திருச்சி துறையூரில் குழிதோண்டியபோது முதுமக்கள் தாழி இருந்தது. இதில் மனித மண்டை ஓடு, கை, கால்களின் எலும்புகள் இருந்தன.திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த காமாட்சிபுரத்தில் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் சந்திரசேகர் என்பவரது தோட்டத்தில் பண்ணை குட்டை அமைக்கும் பணி நடைபெற்றது. அப்போது குழி தோண்டும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டபோது 2 முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டன. பெரிய பலகைக் கல்லால் மூடப்பட்டிருந்த முதல் தாழியின் உள்ளே இறந்தவரின் மண்டை ஓடு பாகங்கள் மற்றும் கை, கால்களின் எலும்புகள் இருந்தன. இதன் வாய்ப் பகுதி 2 அடி, மத்திய பகுதி 3 அடி, உயரம் 4 அடி இருந்தது.மற்றொரு தாழியும் முழுமையாக தோண்டி எடுக்கப்பட்டது. இதில் எலும்பு கூடுகள் இல்லை. முதுமக்கள் தாழிகள் மிகப் பழமையானது.இதுபற்றி தகவல் கிடைத்ததும் வருவாய்த்துறை அதிகாரிகள் விரைந்தனர். முதுமக்கள் தாழியை பார்வையிட்டனர். இதுபற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.