உலக கோப்பை கிரிக்கெட் தொடர், லீக் சுற்று முடிந்து, விறுவிறுப்பான காலிறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அடுத்து 2019ம் ஆண்டில் நடக்கவுள்ள உலக கோப்பை தொடரில், சுவாரசியத்தை கூட்டும் வகையில், டெஸ்ட் அந்தஸ்து பெற்ற 10 அணிகளை மட்டும் விளையாட வைக்கவும், மற்ற கத்துக்குட்டி அணிகளை கழற்றி விடும் முடிவிலும் ஐசிசி உள்ளது. அதற்கு ஏற்றாற்போல், நடப்பு உலக கோப்பை தொடரில் எந்த கத்துக்குட்டி அணியும் காலிறுதிக்கு முன்னேறவில்லை. இது குறித்து அயர்லாந்து அணியின் முன்னாள் ஆல் ரவுண்டரான டிரென்ட் ஜான்ட்சன் கூறுகையில், நடப்பு உலக கோப்பை தொடரில் சிறிய அணிகள் விளையாடியதை பார்க்கையில் இரண்டு விஷயங்கள் தெளிவாகிறது.
முதலாவது, கத்துக்குட்டி அணிகள் பேட்டிங்கில், முழு உறுப்பினராக உள்ள அணிகளை நெருங்கி வந்து விட்டன. இரண்டாவது, பந்து வீச்சில்தான் சிறிய அணிகள் தடுமாற்றத்தை சந்திக்கின்றனர். இதுவே அவர்கள் முன்னேற்றம் காண வேண்டிய பகுதியாகும் என்றார். அசோசியேட் அணிகள் வெளியேற்றப்பட்டாலும், ஆப்கானிஸ்தானின் சமியுல்லா ஷென்வாரி, யுஏஇ அணியின் சைமன் அன்வர், ஸ்காட்லாந்தின் கைலே கோட்சர், ஜோஸ் டேவி, அயர்லாந்தின் ஜான் மூனி, ஆண்ட்ரூ பால்பிர்னி ஆகிய வீரர்கள் கவனத்தை ஈர்த்துள்ளனர்.