மேகதாது அணை விவகாரம் அனைத்துக்கட்சி ஆலோசனை கூட்டத்தில் பெருந்தலைவர் மக்கள் கட்சி பங்கேற்பு
சென்னை: பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் இன்று வெளியிட்ட அறிக்கை:காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் கர்நாடக அரசு புதிதாக இரண்டு அணைகளை கட்டுவதற்கு முடிவு செய்துள்ளது. இதனால் 48 டிஎம்சி தண்ணீரை தேக்கி வைக்க முடியும் என்றும் அதனால் கர்நாடகாவில் விவசாய விளை நிலங்களை அதிகப்படுத்தி உற்பத்தியை பெருக்க முடியும் என்று கர்நாடக அரசு நம்புகிறது.இந்நிலையில் காவிரியில் இரண்டு அணைகளை கர்நாடக அரசு கட்டினால் தமிழகத்திற்கு காவிரியில் இருந்து கிடைக்க வேண்டிய தண்ணீர் சிறிதளவு கூட கிடைக்காமல் போய்விடும். இதனால் இந்த இரண்டு அணைகளையும் கட்டாதவாறு தமிழக விவசாயிகள் பல போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். மத்திய, மாநில அரசுகளின் கவனத்திற்கு கொண்டு சென்றும் இதுவரை எந்த பயனும் இல்லை.
கர்நாடக அரசுக்கு எதிராக தமிழக அரசியல் கட்சிகள் கண்டன குரல் கொடுத்தும் எந்த பயனும் இல்லை. அதனால் தமிழக விவசாயிகள் உருவாக்கியுள்ள அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு முடிவின் படி வரும் 21ம் தேதி சென்னையில் கூட்டியுள்ள அனைத்து கட்சி கூட்டத்தில் பெருந்தலைவர் மக்கள் கட்சி கலந்து கொண்டு தமிழக விவசாயிகளின் நலன் காக்க அவர்களுக்கு ஆதரவாக செயல்படுவோம்.இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.