மோடி இலங்கை பயணத்தின் போது தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் : ஜி.கே.வாசன் கண்டனம்
சென்னை: தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே வாசன் வெளியிட்டுள்ள அறிக்கை:தமிழகத்தைச் சேர்ந்த ராமேஸ்வரம் மீனவர்கள் இந்திய கடற்பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தியும், வலைகளை அறுத்து கடலில் வீசியும் அட்டூழியம் செய்திருக்கிறார்கள். இதனால் 5 மீனவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். படகுகள் சேதமடைந்துள்ளது. இச்செயல் மிகவும் கண்டனத்திற்குரியது. ஏனென்றால் இந்தியப் பிரதமர் இலங்கையில் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டிருக்கும் போது இலங்கை கடற்படை இது போன்ற தாக்குதலை வேண்டுமென்றே நடத்தியுள்ளது.
எனவே மத்திய அரசு இலங்கை அரசை கடுமையாக கண்டிக்க வேண்டும். நேற்றைய தினம் இலங்கைப் பிரதமர் ஆங்கிலத் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் எல்லைதாண்டி வருபவர்களை சுட்டுக் கொள்வதற்கு இலங்கை கடற்படையினருக்கு அதிகாரம் இருப்பதாக தான் ஏற்கனவே கூறியிருந்ததில் எந்த மாற்றமும் இல்லை என மீண்டும் உறுதிபடக் கூறியிருக்கிறார். தமிழக மீனவர்கள் தங்கள் பிரச்னைக்கு தீர்வு கிட்டும் என்று ஆவலோடு எதிர்பார்த்த இந்தியப் பிரதமரின் இலங்கைப் பயணம் கேள்விக்குறியதாக அமைந்திருக்கிறது. இலங்கை கடற்படையின் தொடர் அட்டூழியத்தை நிறுத்த, உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இவ்வாறு ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.