புதுடெல்லி: டெல்லியில் உள்ள மக்களின் பிரச்னைகளை தொகுதிவாரியாக தீர்வு காணும் வகையில் அனைத்து எம்எல்ஏக்களையும் தனித்தனியாக சந்திக்க முதல்வர் கெஜ்ரிவால் முடிவு செய்துள்ளார்.டெல்லியில் அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ள ஆம் ஆத்மி முதல்வர் கெஜ்ரிவால் பதவியேற்றவுடன் உடனடியாக மின்சார கட்டணத்தை பாதியாக குறைத்தார். அடுத்தபடியாக குடிநீர் பிரச்னையை தீர்க்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். தற்போது தொகுதி வாரியாக உள்ள பிரச்னைகளை தீர்க்க ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் அனைத்து எம்எல்ஏக்களையும் அனைத்து துறைகளின் அதிகாரிகளையும் சந்தித்து பேசி முடிவு காண திட்டமிட்டுள்ளார்.
இதுகுறித்து மூத்த எம்எல்ஏ அல்கா லம்பா கூறுகையில், டெல்லியில் உள்ள ஒவ்வொரு தொகுதியிலும் தாமதமாகும் திட்டங்கள் குறித்து அதிகாரிகள் மற்றும் சம்பந்தப்பட்ட எம்எல்ஏக்களை தனித்தனியாக நேரில் சந்தித்து தீர்வு காண முதல்வர் கெஜ்ரிவால் முடிவு செய்துள்ளார். எனது தொகுதியான சாந்தினி சவுக் தொகுதியில் மோசமான சாலைகள் மற்றும் போக்குவரத்து பிரச்னை குறித்து அவருடன் சுமார் அரைமணிநேரம் ஆலோசனை நடத்தினேன். அப்போது அனைத்து துறை அதிகாரிகளையும் இந்த சந்திப்புக்கு வரவழைத்து தேவையான உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளவும், தொகுதி பிரச்னைகளுக்கு தீர்வு காணவும் முதல்வர் கெஜ்ரிவால் உத்தரவிட்டார்.
மேலும் வருகிற 30ம் தேதி வரை அனைத்து தொகுதி எம்எல்ஏக்களையும் தனித்தனியாக இது போல் சந்தித்து டெல்லி மக்களின் குறைகளை தொகுதிவாரியாக களைய ஒற்றை சாளர முறையில் அனைத்து அதிகாரிகளையும் உடன் வைத்துக் கொண்டு தீர்வு காண முடிவு செய்துள்ளார். இதற்காக குறிப்பிட்ட கால இடைவெளியில் அனைத்து எம்எல்ஏக்களையும் சந்தித்து சுமார் 40 நிமிடங்கள் வரை ஆலோசனை நடத்தி வருகிறார் என்றார்.