புதுடெல்லி: பெரும்பாலான அரசு அலுவலகங்கள், 90 சதவீத தனியார் நிறுவனங்களில் பெண்கள் மீதான பாலியல் தொந்தரவுகள் குறித்து கண்காணிக்கும் கமிட்டி அமைக்கப்படவில்லை என மத்திய அமைச்சர் மேனகா காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.ராஜ்யசபாவில் நேற்று நடைபெற்ற விவாதத்தின் போது கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்து மத்திய குழந்தைகள் மற்றும் பெண்கள் நலத்துறை அமைச்சர் மேனகா காந்தி பேசுகையில், பெரும்பாலான அரசு அலுவலகங்கள், 90 சதவீதம் தனியார் நிறுவனங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறித்து கண்காணித்து விசாரணை நடத்தும் கமிட்டி அமைக்கப்படவில்லை. இத்தனைக்கும் நாடாளுமன்ற செயலகத்தில் கூட இது உருவாக்கப்பட்டிருக்கவில்லை.
இந்த விஷயத்தில் அரசு வெற்றிகரமாக செயல்பட தவறிவிட்டது. கடந்த 2013ம் ஆண்டு பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான பாலியல் தொந்தரவுக்கு எதிரான குற்றங்களை கட்டுப்படுத்தும் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதன் அடிப்படையில் பெண்கள் பணிபுரியும் பொது நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறித்து கண்காணிக்க குழு அமைக்கப்பட வேண்டும். ஆனால் பெரும்பாலான பொது மற்றும் தனியார் நிறுவனங்களில் இது போன்ற கமிட்டிகள் அமைக்கப்படவில்லை.
தற்போது அதற்கான நடவடிக்கைகளில் எனது தலைமையிலான அமைச்சகம் விரைந்து செயல்பட்டு வருகிறது என்று தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் அது போன்ற கமிட்டி ஏன் அமைக்கப்படவில்லை என்று பகுஜன்சமாஜ் எம்பி மிஸ்ரா கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த மேனகா கூறுகையில், இதுகுறித்து மக்களவை தலைவர் மற்றும் மாநிலங்களவை தலைவர்தான் முடிவு செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.