வாஷிங்டன்: பாகிஸ்தானில் இரண்டு தேவாலயங்கள் மீது நடைபெற்ற தற்கொலை படை தாக்குதலுக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.பாகிஸ்தானின் லாகூ ரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரண்டு சர்ச்களில் குண்டுகள் வெடித்தன. தலிபான் இயக்கத்தை சேர்ந்த தற்கொலை படையினர் இந்த பயங்கர தாக்குதலை நடத்தினர். இதில் 15 கிறிஸ்தவர்கள் உடல் சிதறி உயிரிழந்தனர். 80க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். பாகிஸ்தானில் கிறிஸ்தவர்கள் மீது அண்மைகாலங்களில் நடைபெற்ற தாக்குதல்களில் மிக மோசமான தாக்குதல் இது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவத்தை தொடர்ந்து பல இடங்களில் வன்முறை வெடித் தது. தீவிரவாதிகள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இரண்டு பேர் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டனர். சர்ச் மீது நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலுக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்தன. இந்நிலையில் அமெரிக்காவும் தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் ஜென் சாகி நேற்று வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
லாகூரில் இரண்டு சர்ச்களில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சாதாரண மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கடுமையாக கண்டிக்கிறோம். தாக்குதலில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். இது போன்ற மோசமான தாக்குதல்களை சந்திக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ள பாகிஸ்தான் மக்களுக்கும், அரசுக்கும் அமெரிக்க அரசு எப்போதும் துணையாக இருக்கும். ஒருவர் எந்த மதத்தினராக இருந்தாலும் எவ்வித அச்சமும் இன்றி அதனை பின்பற்ற அவருக்கு உரிமை உள்ளது. இது ஒரு அடிப்படை உரிமையாகும். பாகிஸ்தான் உள்பட அனைத்து உலக நாடுகளுக்கும் இது பொருந்தும். இந்த உரிமைக்கு அமெரிக்கா எப்போதும் துணை நிற்கும். இவ்வாறு ஜென் கூறினார்.