கோலாகலமாக நடந்து வரும் உலக கோப்பை தொடரில் நாளை நடக்கும் முதல் காலிறுதியில், இலங்கை-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. சிட்னியில் நடக்கும் போட்டி இந்திய நேரப்படி காலை 9 மணிக்கு துவங்குகிறது. இலங்கையின் பேட்டிங் ஆர்டர் மிக வலுவாக உள்ளது. சங்ககாரா, தில்ஷன் சூப்பர் பார்மில் உள்ளனர். ஜெயவர்த்தனே, பெரேரா இருப்பதும் பலம். பந்து வீச்சில் மலிங்கா அச்சுறுத்தலாம். ஆனால் பேட்டிங்குக்கு நிகராக இலங்கையின் பந்து வீச்சு இல்லை. காயத்தால் அவதிப்பட்டு வந்த கேப்டன் மேத்யூஸ், சுழற்பந்து வீச்சாளர் ரங்கணா ஹெராத் உடல்தகுதி பெற்றுள்ளது இலங்கைக்கு வலு சேர்க்கிறது. ஆனால் நல்ல பார்மில் உள்ள திரிமன்னே, காயம் காரணமாக இந்த போட்டியில் விளையாடுவது சந்தேகமே.
பெரிய எதிர்பார்ப்புடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்காவுக்கு கேப்டன் டிவில்லியர்ஸ் மட்டுமே கை கொடுக்கிறார். அம்லா, டூ பிளஸ்சிஸ் போன்ற மற்ற வீரர்கள் ஒரு போட்டியில் நன்றாக விளையாடுவதும், மற்ற போட்டியில் சொதப்புவதுமாக உள்ளனர். தென் ஆப்பிரிக்கா இதுவரை நாக் அவுட் போட்டிகளில் வென்றதில்லை. இம்முறை வெறுங்கையுடன் நாடு திரும்ப தென் ஆப்பிரிக்கா விரும் பாது. இலங்கையின் பேட்டிங் ஆர்டரை குலைக்க, மோர்கல், ஸ்டெயின் கை கொடுப்பது அவசியம். தொடர்ந்து சேசிங்கில் தடுமாறி வரும் தென் ஆப்பிரிக்கா, லீக் சுற்றில் இந்தியா, பாகிஸ்தான் அணிகளுடன் சேசிங்கில் தோல்வியடைந்தது. அதனால் இந்த போட்டியில் டாஸ் முக்கிய பங்கு வகிக்கும். இரு அணிகளும் வெற்றிக்கு கடுமையாக போராடும் என்பதால், விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.