இந்தியன்வெல்ஸ்: பிரிட்டனின் ஆண்டி முர்ரே, கனடாவின் யூஜினி புச்சார்டு ஆகியோர் இன்டியன்வெல்ஸ் ஓபன் டென்னிஸ் போட்டி யில் நான்காம் சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். அமெரிக்காவில் நடந்து வரும் இந்தியன்வெல்ஸ் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் மூன்றாம் சுற்று போட்டிகள் இன்று அதிகாலை நடந்தன. அமெரிக்காவின் ஜான் இஸ்னர், தென்னாப்பிரிக்காவின் கெவின் ஆண்டர்சன் மோதிய போட்டியில் முதல் செட்டில் இரு வீரர்களும் சம பலத்தை வெளிப்படுத்தி புள்ளிகளை மாறி மாறி எடுத்தனர். இதனால் அந்த செட், டை பிரேக்கருக்கு சென்றது. இதில், ஜான் இஸ்னர், கெவின் ஆண்டர்சனின் சர்வீஸை சமாளித்து, செட்டை கைப்பற்றினார். அடுத்த செட்டில் கெவின் ஆண்டர்சனின் சர்வீஸ்களை, இஸ்னர் இரண்டு முறை முறியடித்தார். இதன் மூலம் 7-6 (8-6), 6-2 என நேர் செட்களில் வெற்றி பெற்று நான்காம் சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு மூன்றாம் சுற்றுப்போட்டியில் பிரிட்டனின் ஆண்டி முர்ரே, ஜெர்மனியின் பிலிப் கோல்ஸ்ஷிரைப்ளரை எதிர் கொண்டார். இந்தப்போட்டியில் இருவரது சர்வீஸ்களும் அவ்வப்போது முறியடிக்கப்பட்டன. இதனால், ஆட்டத்தில் அனல் பறந்தது. ஆண்டி முர்ரே முதல் செட்டை கைப்பற்றினார். இரண்டாவது செட்டில் அதிரடி காட்டிய பிலிப், முர்ரேவின் சர்வீஸ் கேமை கைப்பற்றி செட்டை வென்றார். மூன்றாவது செட்டில் அனுபவ ஆட்டத்தை வெளிப்படுத்தி பிலிப்பை திணற அடித்த ஆண்டி முர்ரே செட்டை கைப்பற்றினார். ஆண்டி முர்ரே இந்தப்போட்டியில் 6-1, 3-6, 6-1 என்ற செட் கணக்கில் 1 மணி நேரம் 50 நிமிடங்கள் போராடி வெற்றி பெற்றார்.ஸ்பெயினின் பெர்னாண்டோ வெர்டாஸ்கோ, ஜப்பானின் கீய் நிஷிகோரி மோதிய போட்டியில் முதல் செட், டை பிரேக்கருக்கு சென்றது.
அதில் செட்டை கைப்பற்றினார் வெர்டாஸ்கோ. அடுத்த செட்களில் ஆவேசமான சர்வீஸ்களை வெளிப்படுத்திய நிஷிகோரி, தொடர்ச்சியாக வெர்டாஸ்கோவின் சர்வீஸ் கேம்களை முறியடித்தார். இந்த ஆட்டத்தில் நிஷிகோரி 6-7 (6-8), 6-1, 6-4 என்ற செட் கணக்கில் வெர்டாஸ்கோவை வென்று நான்காம் சுற்றுக்கு தகுதி பெற்றார். ஆடவர் ஒற்றையர் பிரிவு மூன்றாம் சுற்று போட்டிகளில் ஆஸ்திரேலியாவின் தனாசி கோக்கினாகிஸ், பிரான்ஸின் அட்ரியன் மன்னாரினோ ஆகியோரும் வெற்றி பெற்றனர்.மகளிர் ஒற்றையர் மூன்றாம் சுற்றுப்போட்டியில் கனடா வின் யூஜினி புச்சார்டும், அமெரிக்காவின் கோகோ வாண்டேவெகோவும் மோதினர். இந்தப் போட்டியில் அபார ஆட் டத்தை வெளிப்படுத்திய யூஜினி புச்சார்டு 6-3, 6-2 என நேர் செட்களில் வெற்றி பெற்றார்.
அமெரிக்காவின் மேடிசன் கீய்ஸ், செர்பியாவின் ஜெலீனா ஜான் கோவிச் ஆகியோர் மோதிய போட்டி பரபரப்பை ஏற்படுத்தியது. முதல் செட்டில் ஜான்கோவிச்சின் சர்வீஸ் கேமை ஒரு முறை முறியடித்து செட்டை கைப்பற்றினார் மேடிசன் கீய்ஸ். அடுத்த சுற்றில் சுதாரித்த ஜான்கோவிச், மேடிசனை தவறிழைக்க வைத்து, அவரது சர்வீஸ் கேமை கைப்பற்றி செட்டை வென்றார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டில் மேடிசன் கீய்ஸின் சர்வீஸ் கேமை முறியடித்த ஜான்கோவிச், ஆட்டத்தில் வெற்றி பெற்றார். ஜான்கோவிச் 5-7, 6-4, 6-3 என மூன்று செட்களில் 2 மணி 18 நிமிடம் போராடி வெற்றி பெற்றார். உக்ரேனின் லெசியா டுரென்கோ, பிரான்ஸின் அலிஸ் கார்னெட்டை 7-5, 1-6, 6-2 என மூன்று செட்களில் வென்று நான்காம் சுற்றுக்கு முன்னேறினார்.
ஓஸ்னியாக்கி அதிர்ச்சி தோல்விமுன்னணி வீராங்கனையான டென்மார்க்கின் கரோலின் ஓஸ்னியாக்கி மூன்றாம் சுற்று ஆட்டமொன்றில் சுவிட்ஜர்லாந்தின் பெலிண்டா பென்சிக்கை எதிர் கொண்டார்.இதில் கரோலின் ஓஸ்னியாக்கி 8 முறை தனது சர்வீஸ்களில் இரட்டை தவறுகள் செய்து புள்ளியை பறி கொடுத்தார். மொத்த புள்ளிகளில் 55 சதவீதத்தை பெலிண்டா பென்சிக்கும், 44 சதவீதத்தை கரோலின் ஓஸ்னியாக்கியும் வென்றனர். இரண்டு செட்களிலும் தலா ஒரு முறை ஓஸ்னியாக்கியின் சர்வீஸ் கேமை முறியடித்த பெலிண்டா பென்சிக், 6-4, 6-4 என நேர் செட்களில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.