புதுடெல்லி: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுடன் சமாதானமாக செல்ல பூஷன் மற்றும் யாதவ் தயாராக இருப்பதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவித்தன. கெஜ்ரிவாலை சந்திக்க தயாராக இருப்பதாக ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் பிரசாந்த் பூஷண் தெரிவித்துள்ளார்.டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி அமோக வெற்றிபெற்று ஆட்சியை பிடித்தது. கெஜ்ரிவால் முதல்வராக பொறுப்பேற்றார். அரசு அமைந்தது முதலே உட்கட்சி பூசல் வலுத்து வந்தது. கட்சியின் கொள்கைக்கு எதிராக செயல் கெஜ்ரிவால் செயல்படுவதாகவும், தன்னிச்சையாக முடிவுகளை எடுப்பதாகவும் கட்சியின் மூத்த தலைவர்களான பிரசாந்த் பூஷண், யோகேந்திரா ஆகியோர் குற்றம்சாட்டினர்.
முதல்வர் பதவி வகிக்கும் கெஜ்ரிவால், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பதவியை வகிக்க கூடாது என தெரிவித்தனர்.இதையடுத்து, அரசியல் விவகார குழுவில் இருந்து பிரசாந்த், யோகேந்திரா ஆகியோர் நீக்கப்பட்டனர். யோகேந்திராவிடம் இருந்து செய்தி தொடர்பாளர் பதவி பறிக்கப்பட்டது. கட்சிக்கு எதிராகவும், கெஜ்ரிவாலின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் இருவரும் நடந்து கொண்டார்கள் என ஆம் ஆத்மி தலைமை குற்றம்சாட்டியது.
இருவரையும் கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என கெஜ்ரிவாலின் ஆதரவாளர்கள் கோரிக்கை வைத்தனர். உட்கட்சி பூசல் முற்றிவந்த நிலையில், இருமல் பிரச்னைக்காக பெங்களூரு சென்றார் கெஜ்ரிவால். 10 நாட்கள் சிகிச்சைக்கு பின் நேற்று மாலை அவர் டெல்லி திரும்பினார். இந்நிலையில், அரவிந்த் கெஜ்ரிவாலுடன் சமாதானமாக செல்ல பூஷன் மற்றும் யாதவ் திட்டமிட்டிருப்பதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவித்தன. கெஜ்ரிவாலை சந்திக்க தயாராக இருப்பதாக பிரசாந்த் பூஷண் தெரிவித்துள்ளார்.
யோகேந்திர யாதவையும் உடன் அழைத்து வருவதாக கூறிய பூஷண், தற்போதுள்ள பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.பிரசாந்த், யோகேந்திரா ஆகியோர் கிளப்பிய பிரச்னையால் கெஜ்ரிவால் மனம் வருத்தம் அடைந்திருந்தார். உட்கட்சி பூசல் கவலை அளிப்பதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில், பிரசாந்த், யோகேந்திராவை அவர் சந்திப்பாரா, உட்கட்சி பிரச்னைக்கு தீர்வுகாணப்படுமா என்பது விரைவில் தெரிந்துவிடும்.