ஏர்போர்ட்டில் 36வது விபத்து : உள்நாட்டு முனையத்தில் 2 கண்ணாடி உடைந்து நொறுங்கியது
மீனம்பாக்கம்: சென்னை விமான நிலையத்தில் உள்நாடு மற்றும் சர்வதேச முனையங்கள் ரூ.2015 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்டு திறக்கப்பட்டது. புதிய முனையங்களில் மேற்கூரைகள் உடைந்து விழுவது, கண்ணாடி கதவுகள், கண்ணாடி அலங்கார சுவர்கள் உடைந்து நொறுங்கி விழுவது என தொடர்ச்சியாக விபத்துக்கள் நடந்து வருகின்றன. 36வது விபத்து நேற்று நள்ளிரவு உள்நாட்டு முனையத்தில் நடந்துள்ளது.2வது தளத்தில் உள்ள பயணிகள் புறப்பாடு பகுதியில் 4ம் எண் நுழைவு வாயிலின் மேற்பகுதியில் கண்ணாடி சுவரில் பொருத்தப்பட்டுள்ள 4 அடி நீளம், 3 அடி அகலத்திலான 2 பெரிய கண்ணாடிகள் திடீரென பயங்கர சத்தத்துடன் 20 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்து நொறுங்கியது.
அங்கு இரவு 10.30 மணிக்கு மேல் புறப்படும் விமானங்கள் எதுவும் இல்லாததால் அந்த நேரத்தில் பயணிகள் யாரும் இல்லை. ஆனாலும் பாதுகாப்புக்காக நின்றிருந்த 2 மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் அலறியடித்து ஓடினர். தகவல் அறிந்து விமான நிலைய அதிகாரிகளும் ஊழியர்களும் ஓடி வந்தனர். இடிபாடுகள் அகற்றப்பட்டன. உயரதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே நேற்று பகல் 12.45 மணியளவில் உள்நாட்டு முனையத்தில் பயணிகள் வரும் பகுதியில் உள்ள 8 அடி உயரம், 4 அடி அகலமுடையே தானியங்கி கண்ணாடி கதவு உடைந்து விழுந்து நொறுங்கியது. தனியார் மருத்துவமனை ஊழியர் அருண்சிங் (25) காயம் ஏற்பட்டது. அடுத்தடுத்து விபத்துகளால் பயணிகள், ஊழியர்கள், பாதுகாப்பு அதிகாரிகள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.