ராஜிவ் காந்திக்குப் பின், இலங்கைப் பயணம் மேற்கொண்ட முதல் இந்தியப் பிரதமர் மோடி. ராஜிவ் காந்தியின் பயணம், இலங்கையில் மட்டுமல்ல; இந்தியாவிலும் பல்வேறு அரசியல் விளைவுகளை ஏற்படுத்தியது. அதன் தாக்கம் இன்னும் ஓயவில்லை.மோடியின் பயணம், கசப்பான சூழ்நிலைகளை மாற்றியிருக்கிறது. இந்தியாவுடன் நல்லுறவு என்பது, இலங்கையின் புதிய அதிபர் சிறிசேனவின் விருப்பமாகத் தொடர்கிறது. தமிழர்களின் வாக்குகள், ராஜபக்சேவைப் பதவிக்கட்டிலில் இருந்து அகற்றியது. இதன் எதிரொலிதான், சிறிசேனவின் தமிழர்கள் மீதான அக்கறை.இலங்கைத் தமிழர்களின் நலன், தமிழக மீனவர்களின் உரிமை பாதுகாக்கப்படுதல், விருப்பம் இருந்தால் ஒழிய அகதிகளைத் தமிழகத்தில் இருந்து இலங்கைக்குத் திருப்பி அனுப்பாமல் இருத்தல் உள்ளிட்டவைதான், மோடி பயணத்தில், தமிழக மக்கள் எதிர்பார்த்த விஷயங்கள்.
13வது சட்டத் திருத்தம் மூலம் இலங்கைத் தமிழர்களுக்கு உரிய அதிகாரம் கிடைக்க வேண்டும் என்பதை மோடி வலியுறுத்தினார். ஆனால், வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரனுக்கு, இதன் மேல் நம்பிக்கை இல்லை. அதிகாரம் பெறுதல், தமிழர்களின் உரிமையாக இருந்தபோதும், காலம் காலமாக மறுக்கப்பட்டு வருகிறது. சிறிசேன அரசு, இதற்கான நடவடிக்கைகளை அடிமன ஆழத்தில் இருந்து துவக்கியதா என்பதுதான் கேள்வி.போர் காரணமாக சொந்த நாட்டிலேயே அகதிகளாக இலங்கைத் தமிழர்கள் வாழ்கின்றனர். அவர்களுக்காக 27 ஆயிரம் வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இவற்றை மோடி ஒப்படைத்ததோடு, மேலும் 47 ஆயிரம் வீடுகள் கட்டித்தர உறுதியளித்ததை வரவேற்கலாம். 1990க்கு பின்னர், மதுரோடு - தலைமன்னார் இடையே 63 கிமீ தூரம் மீண்டும் ரயில் சேவை துவங்கியிருக்கிறது. இது தமிழர்களுக்குப் பயன்தருவதாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
தமிழக மீனவர் பிரச்னைக்குத் தீர்வு காண, இருநாட்டு மீனவப் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தையே சிறந்த தீர்வு என மோடி கருதுகிறார். கச்சத்தீவு உரிமையைத் திரும்பப் பெறுதல் என்பது தமிழக மீனவர்கள் கூறும் தீர்வு. காங்கிரஸ் அரசாகட்டும். பாஜ அரசாகட்டும்... இந்த விஷயத்தில் நீதிமன்றத்தைக் காரணம் காட்டி, மவுனம் காக்கின்றன. மீனவர் பிரச்னையில் நிரந்தரத்தீர்வு காண்பதற்கு இதைவிட உரிய சூழல் வாய்ப்பது கடினம். மோடி இலங்கையில் இருக்கும்போதே, தமிழக மீனவர்கள் மீது அத்துமீறியுள்ள இலங்கைக் கடற்படையின் செயல் கண்டனத்துக்குரியது.
வெளிநாட்டுப் பயணங்களின் போது, அங்குள்ள எதிர்க்கட்சித் தலைவர்களைப் பிரதமர் சந்தித்துப் பேசுவதை மரபுரீதியான அணுகுமுறை என்று பா.ஜ கூறலாம். ஆனால், ராஜபக்சேவுடன் மோடி சந்தித்துப் பேசியிருப்பதை தமிழர்கள் ஜீரணிப்பது கடினம்.இலங்கையுடனான இந்தியாவின் நெருக்கம் சீனாவின் ஆதிக்கத்துக்குப் பலத்த அடி. அதேசமயம், தமிழகம் மற்றும் இலங்கைத் தமிழர்களின் மன உணர்வுகளை ஒட்டியதாகவும், அதற்கேற்ப நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் இலங்கையின் நட்பு அமைய வேண்டும். இது மோடி பயணம் மூலம் சாத்தியமானதா என்று தமிழர்களின் மனசாட்சிக்குத் தெரியும்.