சஸ்பெண்ட் உத்தரவால் மயங்கி விழுந்த மாநகராட்சி அலுவலர் : ஊழியர்கள் மறியல்
சென்னை: சென்னை மாநகராட்சி மண்டலம் 8ல் உள்ள 108 வது வார்டில் துப்புரவு ஆய்வாளராக இருப்பவர் சேட்டு. இவரது வார்டு சிறப்பாக பராமரிக்கப்படுவதாக பல முறை அமைச்சர் வரையிலும் பாராட்டு வாங்கியவர். இவரது வார்டு உள்ள மண¢டலத்தில் சென்னை மத்திய வட்டார துணை ஆணையர் அலுவலகம் உள்ளது. வட்டார துணை ஆணையர் அருண் சுந்தர் தயாளன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் 108 வது வார்டுக்கு ஆய்வுக்கு சென்றார். அப்போது துப்புரவு பணியாளர் இருவர் ஓய்வு எடுப்பதை பார்த்து சம்பந்தப்பட்ட வார்டு துப்புரவு ஆய்வாளருக்கு நோட்டீஸ் கொடுத்துள்ளார். அவரது விளக்கத்தை ஏற்காமல் நேற்று அவருக்கு பணி இடை நீக்க உத்தரவு வழங்கப்பட்டது. அந்த உத்தரவை கையில் வாங்கியதும் அதிர்ச்சியில் துப்புரவு ஆய்வாளர் சேட்டு மயங்கி விழுந்தார்.
இதை பார்த்து அதிர்ச்சியடைந்த சக ஊழியர்கள் அவரை உடனடியாக அருகிலிருந்த தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த தகவல் ஊழியர்களிடையே பரவியதும் நியாயமான அதிகாரிக்கு தண்டனையா என நூற்றுக்கணக்கான ஊழியர்கள் திரண்டு வட்டார துணை ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்போது அவர் அங்கு இல்லை. பின் ஊழியர்கள் படுத்தபடி போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனடியாக அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். சஸ்பெண்ட் உத்தரவை திரும்ப பெற வேண்டும், அதிகாரியின் மருத்துவ செலவை வட்டார துணை ஆணையர் அருண் சுந்தர் தயாளன் ஏற்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அதை பரிசீலிப்பதாக அதிகாரிகள் கூறவே கலைந்து சென்றனர்.