ஜனநாயகத்தில் அறப்போராட்டங்கள் வலிமையானவை. ஆனால் மக்கள் பிரதிநிதிகளே இதை மீறிவிடுகின்றனர். கேரளச் சட்டப்பேரவை போர்க்களமாகியிருக்க வேண்டியதில்லை. முதல்வர் உம்மன்சாண்டி சொல்வதைப் போல், நேற்று கருப்பு தினம்தான். ஆனால், பிரச்னை வளர்ந்ததற்கு காரணம், அரசியல் என்று மட்டும் கூற முடியாது.மது விற்பனையில் கட்டுப்பாடுகள் கொண்டுவந்தபோது, உம்மன்சாண்டி அரசுக்குப் பாராட்டுகள் குவிந்தன. பூரண மதுவிலக்கின் முன்னோட்டமாக இது கருதப்பட்டது. ஆனால், மூடப்பட்ட பார்களைத் திறக்க நிதியமைச்சர் மாணி, ரூ.1 கோடி லஞ்சம் வாங்கியதாக எழுந்த புகார், இந்த நம்பிக்கையைத் தகர்த்தது. எப்ஐஆர் பதிவு செய்யப்பட்ட நிலையிலும், மாணி பதவியில் தொடர்கிறார். கறை படிந்த அமைச்சர், பட்ஜெட் தாக்கல் செய்கிறார் என்றதும் எதிர்க்கட்சிகள் கொதித்தன. ஆனால், உம்மன்சாண்டி, மாணியின் நேர்மையைச் சந்தேகிக்கவில்லை. பட்ஜெட்டை மாணிதான் தாக்கல் செய்வார் என்பதில் உறுதியாக இருந்தார்.
ஊழல் குற்றச்சாட்டு எழுந்தவுடன், அதுவும் எப்ஐஆர் போடப்பட்ட நிலையில், பதவியை மாணியே முன்வந்து ராஜினாமா செய்திருந்தால், அரசியல் மாண்புக்கு சிறந்த முன்னுதாரணமாக இருந்திருக்கும். ஆனால், பதவி நாற்காலியை நிரந்தர சுகமாய்க் கருதுவோர் அதைச் செய்வதில்லை.மாணிக்கு எதிராக, இடது முன்னணி, பா.ஜ இளைஞர் அமைப்பான யுவமோர்ச்சா போன்றவை பேரவையை முற்றுகையிடப் போவதாக அறிவித்திருந்தனர். பேரவைக்குள்ளேயே எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் தங்கி, போராட்டத்துக்குத் தயாராக இருந்தனர். இருக்கைக்குக் கூடச் செல்லவிடாமல் தடுத்தாலும், பட்ஜெட் அறிக்கை படிக்கும் சம்பிரதாயக் கடமையை மாணி ஒருவழியாக முடித்தார். பட்ஜெட் முறைப்படி தாக்கல் செய்யப்பட்டதாக சபாநாயகர் சக்தன் அறிவித்ததிலும், எதிர்க்கட்சித் தலைவர் அச்சுதானந்தன் செல்லாத பட்ஜெட் என்று கூறியதிலும் ஆச்சர்யப்பட ஒன்றும் இல்லை.
மாணி பட்ஜெட் வாசித்த நேரத்தில் பேரவையில் கூச்சல், குழப்பம், ரகளை என களேபரங்கள் அரங்கேறின. தள்ளுமுள்ளுவில் எம்எல்ஏக்கள் மயங்கிவிழுந்தனர். பேரவைக்கு வெளியிலும் கல்வீச்சு, தீவைப்பு, தடியடி என வன்முறைகளுக்குப் பஞ்சம் இல்லை.கேரளாவில் இன்று முழு அடைப்பு போராட்டத்தை இடது முன்னணி அறிவித்துள்ளது. இதுபோன்ற போராட்டங்களை, நீதிமன்றங்கள் விரும்புவதில்லை. ஆனால், ஜனநாயகத்தில் எதிர்ப்பைக் காட்ட, இத்தகைய போராட்டங்கள் இயல்பாகியிருக்கின்றன. கூடவே, வன்முறைகளும் ஒட்டிக்கொண்டுவிட்டன.இத்தனை போராட்டங்களுக்குப் பின்னரும், மாணி பிரச்னையில், தீர்வு காணப்படவில்லை. போராட்டங்கள் மக்களைப் பாதிக்காத வகையில் அமைய வேண்டும். இதற்கு ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என இருதரப்பினருக்குமே பொறுப்பு உள்ளது. பொறுப்பு கடினமானது. இதை நிறைவேற்ற, வன்முறை எண்ணம் அற்ற, பொறுமை அவசியம். ஆனால், பொறுமைக்கு இங்கு நேரம் இல்லை.