தூக்கம் சுகமானது. ஆழ்ந்த தூக்கம் புத்துணர்ச்சியைத் தருவதோடு, சிந்தனையையும் வலுவாக்குகிறது. ஆனால், தூக்கம் சிலருக்குக் கனவாகவே இருக்கிறது. பஞ்சு மெத்தை எனினும், மலர்ப்படுக்கை என்றாலும் மாத்திரை போட்டால்தான் கண்கள் அயர்கின்றன. பலர் எந்த நேரமும் தூங்குவதற்குத் தயாராக இருக்கிறார்கள். கொட்டாவி கெட்ட ஆவியாக வந்துகொண்டே இருக்கும். அறிவியல்பூர்வமாகக் கூற முடியாவிட்டாலும், அவர்களுக்குச் சோம்பேறிகள் என்ற பட்டப்பெயர் எளிதாகக் கிடைத்துவிடும்.ஐம்புலன்கள் தூக்கத்தில் அடங்கி ஒடுங்க வேண்டும். மற்ற புலன்கள் அமைதியான பின்பும், இமைகள் மூடியிருந்தாலும், விழிகள் மட்டும் அசைந்துகொண்டே இருக்கும். விழிகள் அசைவதை நிறுத்தினால், ஆழ்ந்த தூக்கம் எளிதாகும். ஆழ்ந்த தூக்கத்திலும், மனம் மட்டும் இயங்கிக்கொண்டே இருக்கும். மனம் இல்லாமல் உயிர் தனியாக இயங்குவதில்லை.
‘தூக்கத்திலேயே உயிர் போகணும்Õ என்பார்கள். புலன்கள் அடங்கியிருக்கும்போது, உயிர் போனாலும் வலி இருக்காது என்று நம்புவதால்தான் இந்த ஆசை. அப்படி நடந்தால், ‘நல்ல சாவு’ என்று அங்கீகாரம் கிடைக்கிறது. ஒருவர் இறந்துவிடும் நிலையில் இருக்கிறார். அவருக்குச் சிகிச்சையை நிறுத்திவிட்டு, ஆழ்ந்த உறக்கத்திலேயே உயிரைப் பிரிய வைப்பது, மருத்துவ ரீதியாக ஒத்துக்கொள்ளப்படுவதில்லை. அப்படிச் செய்வது குற்றமும் கூட.பிரான்சில் இப்படிச் செய்வதற்குச் சட்ட அனுமதி வழங்கலாமா என்று ஆலோசனை நடக்கிறது. பார்லிமென்டில் இதற்கான விவாதம் நடந்துள்ளது. ‘கருணைக்கொலை போன்றதல்லவா இது’ என்று கருணைக்கொலையை எதிர்ப்பவர்கள் இதையும் எதிர்க்கிறார்கள்.
‘சில மணி நேரங்கள் அல்லது ஓரிரு நாளில் உயிர் இழப்பது நிச்சயம் என்று தெரிந்தபின்பு, அவர்களுக்குச் சிகிச்சை அளித்து, உடல் உறுப்புகளை வருத்துவதால் என்ன பயன்? அவர்களை ஆழ்ந்த தூக்க நிலைக்குக் கொண்டு செல்வதன் மூலம் உயிர் சுகமாகப் பிரிந்துவிடும்Õ என்று கூறுகிறார் இந்த மசோதாவைக் கொண்டுவருவதற்கு மூல காரணமான ஜீன் லியோனெட்டி. ‘இப்படி இறப்பதைத் தற்கொலை என்று கூடக் கூறலாம். சாவைத் துணிச்சலுடன் சந்திப்பதே சிறந்தது. மருத்துவ வசதிகள் இருக்கும்போது, உயிரை மீட்பதற்கான வழியை ஆராய வேண்டுமே ஒழிய, போக்குவதற்கு வழி சொல்லக்கூடாது. இது பிற்போக்குத்தனம்Õ என்று கடும் எதிர்ப்பலைகளும் உருவாகியுள்ளன.மனிதாபிமானம் இல்லாதவர்கள், மனம் இருந்தாலும் மரித்தவர்கள்தான். உடல், பொருள், ஆவியை இழந்தாலும், மனிதாபிமானிகள் மரணம் இல்லாப் பெருவாழ்வு வாழ்கிறார்கள். சங்கடம் தராத மரணம் சரியென்ற வாதம் சர்ச்சைக்குள்ளாகலாம். ஆனால், மரணத்தை மரணிக்க முடியாது என்பதுதானே மாற்ற முடியாத நிஜம்.