உலக மகளிர் தினத்தில் காரோட்டும் பெண்களுக்கு சுங்க கட்டணம் இலவசம் : டெல்லியில் வித்தியாசமான அறிவிப்பு
நொய்டா : உலக மகளிர் தினமான இன்று கார் ஓட்டி வரும் பெண்களுக்கு சுங்க கட்டணம் இலவசம் என்று சுங்கம் வசூலிக்கும் தனியார் நிறுவனம் அறிவித்துள்ளது. உலக மகளிர் தினம் இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி பல்வேறு வித்தியாசமான அறிவிப்புகள், விளம்பரங்கள் போன்றவை ஒவ்வொரு ஆண்டும் வெளியாவது வழக்கம். இதில் சற்று வித்தியாசமாக டெல்லி அருகே உள்ள நொய்டாவில் எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலையில் வாகனங்களுக்கு சுங்கம் வசூலிக்கும் தனியார் நிறுவனம் வித்தியாசமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
இதில் சர்வதேச மகளிர் தினமான இன்று எங்களது சாலையின் வழியாக கார் ஓட்டி வரும் பெண் டிரைவர்களுக்கு சுங்க கட்டணம் இலவசம் என்று அறிவித்துள்ளது. நொய்டா தொடங்கி மயூர் விகார் வரையிலான எட்டு வழி சாலையான 9.2 கிமீ தொலைவு உள்ள இந்த எக்ஸ்பிரஸ் ஹைவேயை இந்நிறுவனம் பராமரித்து வருகிறது. இந்த இலவச சலுகை சாலையின் இருபுறமும் அமைக்கப்பட்டுள்ள சுங்க சாவடிகளிலும் வழங்கப்படும் என்றும் அந்த நிறுவனம் அதிரடியாக அறிவித்துள்ளது.