வங்கதேசத்தில் வெடிகுண்டு தாக்குதலில் பிரதமர் உயிர் தப்பினார்
டாக்கா : வங்கதேசத்தில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் நேற்று மாலை வெடிகுண்டு தாக்குதல்கள் நடைபெற்றது. இத்தாக்குதல்களில் இருந்து வங்கதேச பிரதமர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். வங்கதேசத்தின் விடுதலைக்காக போராடியவர் தற்போதைய பிரதமர் ஷேக் ஹசீனாவின் தந்தை ஷேக் முஜிபுர் ரெஹ்மான். இவர் வங்கதேச விடுதலைக்காக முதன்முறையாக கடந்த 1971-ம் ஆண்டு சுக்ரவார்டி உத்யான் பகுதியில் எழுச்சி உரையாற்றினார். அதன் 44-வது ஆண்டு விழாவை நேற்று மாலை அப்பகுதியில் ஆளும் அவாமி லீக் கட்சி கொண்டாடியது. சுக்ரவார்டி உத்யானில் கர்வான் பஜார் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா கலந்து கொண் டார். அவரது பாதுகாப்பு வாகனம் அப்பகுதியை கடந்து சென்ற 10 நிமிடத்தில் அங்கு புதைக்கப்பட்டு இருந்த வெடிகுண்டு வெடித்து சிதறியது. இத்தாக்குதலில் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த மெஹபூப் என்ற போலீஸ் அதிகாரி படுகாயம் அடைந்தார்.
ஆளுங்கட்சிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் வெடிகுண்டு தாக்குதல்களை நடத்தியிருக்குமோ என்று வங்கதேச போலீஸ் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வங்கதேசத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான ஆளும் அவாமி கட்சி பல்வேறு முறைகேடுகள் செய்து வெற்றி பெற்றுள்ளது. அவரது ஆட்சி அகற்றப்பட்டு, அங்கு நடுநிலையான காபந்து அரசின் மேற்பார்வையில் மீண்டும் தேர்தலை நடத்த வேண்டும் என்று வங்கதேச தேசிய கட்சி உட்பட 20 எதிர்க்கட்சிகள் பல் வேறு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன. கடந்த 2 மாதங்களாக நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதலில் இதுவரை 100 பேர் பலியாகி உள்ளனர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.