போராட்டத்தில் நாங்கள் ஜெ. யாகத்தில் அமைச்சரா? பொதுமக்கள் கொந்தளிப்பு
ஈரோடு: தொகுதி மக்கள் வாழ்வாதாரத்தை காத்துக் கொள்ள போராட்டத்தில் ஈடுபட்டிருந்த போது கோயில்களில் யாகம் நடத்துவதில் அமைச்சர் கவனம் செலுத்துவதா என்று தோப்பு வெங்கடாசலத்துக்கு எதிராக ஈரோடு மக்கள் கொந்தளித்துள்ளனர்.இதுதொடர்பாக தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் முகிலன் வெளியிட்டுள்ள அறிக்கை: பெருந்துறை சிப்காட்டில் கோக் தொழிற்சாலை அமையக்கூடாது என்பதை வலியுறுத்தி சென்னிமலை, பெருந்துறை பகுதியை சேர்ந்த 2 லட்சம் மக்கள் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் முழு கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.ஆனால், தொகுதியை சேர்ந்த அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலமோ, மக்களின் உணர்வு பூர்வமான போராட்டம் நடந்த போது, தொகுதியில் இருந்து கொண்டே போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்த முன்வரவில்லை. ஆனால் கோயில்களில் யாகத்தில் பங்கேற்கிறார். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அமைச்சரின் இந்த நடவடிக்கை மக்களை அதிருப்தியடைய செய்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.கடையடைப்பு போராட்டம் நடந்த போது, பவானி சங்கமேஸ்வரர் கோயிலில் ஜெயலலிதாவுக்காக நடந்த யாகத்தில் தோப்பு வெங்கடாச்சலம் கலந்து கொண்டார். அமைச்சரின் இந்த செயலுக்கு பெருந்துறை பகுதி மக்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் அமைச்சரின் செயல்பாட்டுக்கு எதிர்ப்பும் வலுத்து வருகிறது.