மாசி கொடை விழா : மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலில் வலியபடுக்கை பூஜை : பக்தர்கள் திரண்டனர்
குளச்சல்: மண்டைக்காடு பகவதியம்மன் கோயில் மாசி கொடை விழா கடந்த 1ம் தேதி கொடியேற்றத்துடன்துவங்கியது. விழாவின் 6ம் நாளான நேற்று காலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து 5 மணிக்கு பஞ்சாபிஷேகம், 6.30க்கு தீபாராதனை, 9.30க்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி நடந்தது. பகல் 12 மணிக்கு பருத்திவிளை இந்து சமுதாய பேரவை சார்பில் யானை மீது களப பவனி, மதியம் 1 மணிக்கு உச்சிகால பூஜை, மாலை 4 மணிக்கு குளச்சல் களிமார்கணேசபுரம் அடைக்கலம் தந்த பிள்ளையார் கோயிலில் இருந்து யானை மீது களப, மாவிளக்கு பவனி, 6.30க்கு சிறப்பு நாதஸ்வர இசையுடன் சாயரட்சை தீபாராதனை, இரவு 9 மணிக்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி, நள்ளிரவு 12 மணிக்கு வலியபடுக்கை பூஜை நடந்தது.நேற்று வெள்ளிக்கிழமை மற்றும் வலியபடுக்கை மகாபூஜை என்பதால் காலை முதலே மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கேரள மாநிலத்தில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் மண்டைக்காட்டிற்கு வந்து, கடலில் புனித நீராடி, பொங்கலிட்டு அம்மனை வழிபட்டனர். கடற்கரை, மண்டை காடு சந்திப்பு, கோயில் வளாகம், பொங்கலிடும்பகுதிகளில் எல்லாம் வழக்கத்தைவிட பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.