பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் போராட்டம்
சென்னை: பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.கடந்த மாதம் 28ம் தேதி நள்ளிரவு முதல் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.3.18, டீசல் ரூ.3.09 என உயர்த்தப்பட்டது. இதற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியது. குறிப்பாக தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சியின் தலைவர்களும் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு இதே கோரிக்கையை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தமிழகம் முழுவதும் போராட்டம் நடந்தது.
இந்நிலையில், பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து இன்று தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்தது. இதன்படி, இன்று காலை முதல் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கட்சியினர் திரளாக கலந்துகொண்டனர். சென்னையில் இன்று மாலை 5 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்த உள்ளார்.