மாமல்லபுரம் பாதாள சாக்கடை திட்டம் குறித்து வெள்ளை அறிக்கை : வைகோ வலியுறுத்தல்
சென்னை: மதிமுக பொது செயலாளர் வைகோ வெளியிட்ட அறிக்கை:மாமல்லபுரம் சிறப்பு நிலை பேரூராட்சிக்கு ரூ.8 கோடியே 72 லட்சம் மதிப்பில் பாதாள சாக்கடைத் திட்டம் முடிந்ததாக சொல்லப்படும் நிலையில், மக்களின் பயன்பாட்டுக்கு இன்று வரும், நாளை வரும் என்று வருடங்கள் கடந்துகொண்டே செல்கிறது.எனவே, பாதாள சாக்கடைத் திட்டத்தின் இன்றைய உண்மையான நிலை என்ன? இத்திட்டம் மக்களின் பயன்பாட்டுக்கு வருமா? அல்லது முறைகேடுகள் நடந்து இத்திட்டம் தோல்வியில் முடிந்துவிட்டதா? என்பதனை சம்மந்தப்பட்ட துறையினர் மக்கள் மன்றத்துக்கு வெள்ளை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். மாமல்லபுரம் பேரூராட்சி எல்லைக்கு உள்ளேயே இருக்கும் பூஞ்சேரி, பவளக்காரசத்திரம், பகுதியில் இருந்து, புராதனச் சின்னத்திற்கு செல்லும் இரண்டு கிலோ மீட்டரில் கிழக்குக் கடற்கரைச் சாலையைக் கடப்பதற்கு, சுங்க வரி ரூ.45, அடுத்த அரை கிலோ மீட்டர் தூரத்தில் வாகன நுழைவு வரி ரூ. 40, அடுத்த அரை கிலோ மீட்டரில் வாகன நிறுத்தக் கட்டணம் ரூ.20, அடுத்த 10 அடி தூரத்தில் புராதன சின்னங்களைப் பார்வையிட மத்திய தொல்லியல்துறை நபர் ஒன்றுக்கு இந்தியர்களுக்கு 10 ரூபாய் கட்டணமும், வெளிநாட்டு பயணிகளுக்கு 250 ரூபாயும் வசூலிக்கின்றது.தமிழக அரசும், சுற்றுலாத் துறையும், மாவட்ட நிர்வாகமும் வரிவசூலை முறைப்படுத்த வேண்டும். தமிழ்நாடு சாலை மேம்பாட்டுக் கழகத்தின் சார்பில் வசூலிப்பதை ரத்து செய்ய வேண்டும்;இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.