பொன்னேரி: பொன்னேரி அடுத்த பூங்குளம் ஊராட்சியில் பொதுசுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருந்து துறை சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது. பொது மருத்துவ முகாமில் தாய்சேய் நலம், எலும்பு மற்றும் மூட்டு, கண், காது, மூக்கு, தொண்டை பிரச்னைகள், தோல் நோய் உள்ளிட்ட பல வித நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. 60 கர்ப்பிணிகளுக்கு ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டது. 16 தாய்மார்களுக்கு மகப்பேறு உதவித்தொகைக்கான தகவல் படிவங்கள் வழங்கப்பட்டது. சீர் வரிசைகளோடு 15 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நடத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் பூங்குளம் ஊராட்சி தலைவர் பானுமதி ஜெகநாதன், சுகாதார துறை துணை இயக்குனர் பிரபாகரன், வட்டார மருத்துவ அலுவலர் சுரேஷ், தேவம்பட்டு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் ஜோஸ்வின், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பாலகிருஷ்ணன் மற்றும் காட்டூர், மெதூர், மணலி புது நகர் மருத்துவ அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர்கள், செவிலியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்றனர்.