நான்கு அட்டகாசமான வெற்றிகளுடன், உலகக்கோப்பைக் கிரிக்கெட் காலிறுதிக்கு முன்னேறி, ஹோலி கொண்டாடியிருக்கிறது இந்தியா. ‘பலவீனமான பந்துவீச்சால், குரூப் சுற்றையே தாண்ட முடியுமா?' என்று கூறிவந்த விமர்சகர்கள் வாயடைத்து நிற்கிறார்கள். தலைநிமிர்ந்த வேகப்பந்து, மாய£ஜால சுழல், அசத்தல் பேட்டிங், துல்லியமான பீல்டிங்... இவற்றையெல்லாம் தாண்டி, ஒற்றுமையான ஆட்டம் மூலம் டோனி தலைமையிலான அணி, வெற்றிகளைச் சாத்தியமாக்கியது.அணியில் ஒவ்வொருவரும் நட்சத்திர வீரர்களாக இருந்தாலும், ஒருவரின் தனிப்பட்ட ஆட்டம் மட்டுமே வெற்றிக்குக் காரணமாக அமையவில்லை. பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுடனான ஆட்டத்தில் பெற்ற வெற்றிகளைக் காட்டிலும், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தைத்தான், இந்திய வீரர்கள் போராடி வென்றுள்ளனர். இத்தனைக்கும், இந்த ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் எடுத்த ரன்கள் 182 தான்.
நிலைத்து நிற்க விடாமல் கெயில் புயலையும், சுழற்றி ஆடக்கூடிய ஸ்மித்தையும் ஷமி துவக்கத்திலேயே வீழ்த்திவிட்டார். சாமுவேலும் ரன் அவுட் செய்யப்பட்டதால், இலக்கு குறைந்தது. இருந்தாலும், கடந்த 3 ஆட்டங்களைப் போல், இந்திய வீரர்களின் பீல்டிங்கை இந்த முறை துல்லியம் என்று கூற முடியாது. கேட்ச்கள் கோட்டை விடப்பட்டன. எளிதான ஸ்கோர் என்று களமிறங்கிய இந்திய வீரர்களை அடுத்தடுத்து அவுட் செய்து வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சாளர்கள் அதிர்ச்சிக்குள்ளாக்கினர். அலட்சியமாக ஆடினால் கிரிக்கெட்டில் எளிய அணி கூட வலுவான அணியை வெற்றிபெற்றுவிடும். ஜடேஜா வீழ்ந்தபோது, இந்திய அணி 6 விக்கெட்களைப் பறிகொடுத்து 134 ரன்களுடன் தடுமாறிக்கொண்டிருந்தது. நல்ல வேளை. கேப்டன் கூல், அஸ்வினுடன் இணைந்து அதிரடி காட்டாமல், பொறுமையாக ஆடி வெற்றியைப் பெற்றுத் தந்தார்.
கெயில் உள்ளிட்ட வீரர்கள் சிறப்பாக விளையாடியிருந்தால், இந்தியா வெற்றி பெறுவதில் சிக்கல் ஏற்பட்டிருக்கும்.எல்லா ஆட்டங்களிலும் ஒரேமாதிரி ஆட்டத் திறனை வெளிப்படுத்துவது இயலாததுதான். இந்திய அணியின் பந்துவீச்சு எழுச்சி கண்டிருக்கிறது.பேட்டிங், பீல்டிங் அசத்தல்கள் தொடர்கிறது. இதை வரும் ஆட்டங்களிலும் தக்கவைத்தால், வெற்றியை எளிதாக ஈட்டலாம். ‘ஸ்கெட்ச் கெயிலுக்குப் போட்டு, சாமுவேல்ஸ தூக்கிட்டானுங்கÕ, ‘டோனி டு கெயில்: நீ சிக்ஸர், சிக்ஸரா அடிக்க நாங்க ஜிம்பாப்வே இல்லடா சிப்சு...' என்று ரசிகர்கள் டுவிட்டரில் போட்டுத் தாக்குகிறார்கள். ‘தம்பி விராட்டு பனியன் காலர மடக்கிவிடுப்பா... லைட்டா திமிர்த்தனம் தெரியுது' என்று கூடவே எச்சரிக்கையும் விடுக்கிறார்கள். உஷாராக இருப்பது நல்லதுதான்.