சிறுநீரக கோளாறால் அவதி: முலாயம் சிங் ஓய்வெடுக்க டாக்டர்கள் பரிந்துரை
லக்னோ: சிறுநீரக கோளாறு காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள முலாயம் சிங் ஓய்வு எடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.உத்தரபிரதேசத்தின் ஆளும் கட்சியான சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங். கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது பேரனுக்கு லாலு மகளுடன் திருமணம் நடத்தி வைத்தார். அதனைத் தொடர்ந்து தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் உள்ளிட்ட பணிகளிலும் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார். இந்த சூழலில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு உடல் நலம் பாதிக்கப்பட்ட முலாயம் சிங் லக்னோவில் உள்ள சஞ்சய் காந்தி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவரது உடலை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுநீரக கோளாறு ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்தனர். பின்னர் சிகிச்சைக்கு பிறகு அவர் வீடு திரும்பினார். இருந்த போதிலும் போதிய அளவுக்கு உடல் நலம் பெறும் வரையில் ஓய்வில் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரை செய்துள்ளனர். இதுகுறித்து முலாயம் குடும்பத்தினர் கூறுகையில், வீட்டு திருமணம், கட்சி பணி, நாடாளுமன்ற கூட்டத் தொடர் என்று ஓய்வின்றி பணியில் ஈடுபட்டதால் முலாயம் உடல் நலம் பாதிக்கப்பட்டார் என்று தெரிவித்தனர்.