உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் தேர்தல் சீர்திருத்தங்கள் அவசியமானவை. அதிநவீனத் தொழில்நுட்பத்தின் வளர்ச்சிதான், மின்னணு வாக்குப்பதிவு. வாக்குச்சீட்டுகளுக்காக டன் கணக்கில் காகிதம் செலவாவது தடுக்கப்பட்டதோடு, நாட்கணக்கில் நீடித்த வாக்கு எண்ணிக்கை சில மணி நேரங்களுக்குள் எளிமையானது.ஆணையம் கண்கொத்திப் பாம்பாகச் செயல்பட்டாலும், தேர்தல் முறைகேடுகளைத் தவிர்ப்பது மட்டும் இன்னும் சாத்தியப்படவில்லை. ஆணையராக டி.என்.சேஷன் பொறுப்பேற்றபோதுதான், ஆணையத்தின் உரிமைகள் வாக்காளர்கள் பலருக்கும், ஏன்... அரசியல் கட்சியினருக்கே கூட தெரியவந்தது. ஆணையத்தின் கிடுக்கிப்பிடி நடவடிக்கைகளை, டி.என்.சேஷனைத் தொடர்ந்து நியமிக்கப்பட்ட ஆணையர்களும் பின்பற்றத் துவங்கினர். இது தேர்தலைச் சடங்காக இல்லாமல், அர்த்தமுள்ளதாக்கியது. அதேசமயம், இந்த நடவடிக்கைகளே கூட, ஆளும்கட்சியினருக்குச் சார்புடையதாக மாறிவிடுகிறது என்ற குற்றச்சாட்டுகள், அடிக்கடி முன்வைக்கப்படுவதையும் மறுப்பதற்கில்லை.
போலி வாக்காளர்கள், ஆணையத்துக்குப் பெரும் சவாலாகத் திகழ்கின்றனர். வாக்குப்பதிவு மையங்களில், வேட்பாளர்களின் முகவர்கள், மைய அதிகாரிகள் உள்ளிட்டவர்களின் கண்காணிப்பை மீறி, போலி வாக்காளர்கள் வாக்களிக்க முடியாதுதான். ஆனால், யதார்த்தத்தில் இது நடப்பதில்லை.சமீபத்தில் நடந்த ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் வரை போலி வாக்காளர்கள் குற்றச்சாட்டு எழாத தேர்தல்கள் இல்லை. நீதிமன்றக் கதவுகளைத் தட்டி, இப்பிரச்னைக்கு அவசரத் தீர்வு காண வேண்டிய சூழ்நிலைகள் எழுகின்றன. ‘எனக்கு 2 தொகுதியிலேயும் ஓட்டு இருக்கு...’ என்று பெருமையாகக் கூறுபவர்கள் இருக்கின்றனர். வாக்குப்பதிவில் ஆள்மாறாட்டமும் இன்றளவும் நடக்கிறது.
வாக்காளர் பட்டியலை முழுவதும் திருத்தும் திட்டத்தை அதிரடியாக ஆணையம் துவக்கியுள்ளது. வாக்காளர் விவரங்களைத் தவறில்லாமல் பதிவு செய்வதோடு, போலி வாக்காளர்களை நீக்குவதுதான் இதன் முதன்மை நோக்கம். ஆதார் விவரங்களை வாக்காளர் பட்டியலுடன் இணைப்பதே புதிய திட்டம். தேர்தல் ஆணைய இணையதளம், 51969 என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ், இமெயில், செல்போன் அப்ளிகேஷன் மற்றும் 1950(சென்னை தேர்தல் கட்டுப்பாட்டு அலுவலகம்), 1077(மாவட்டத் தேர்தல் கட்டுப்பாட்டு அலுவலகம்) ஆகிய தொலைபேசி எண்கள் வாயிலாகவும் ஆதார் எண்ணை வாக்காளர்கள் தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.ஆதார் விவரங்கள் பதிவு செய்யும்போது, 2 இடங்களில் வாக்காளர் தனது பெயரைப் பதிவு செய்வது இயலாததாகிவிடும்.
இதனால், போலி வாக்காளர்கள் இடம்பெற வாய்ப்பில்லை. ஆனால், இந்தத் திட்டம் செயல்பாட்டுக்கு வருவதற்கு அரசியல் கட்சியினரைக் காட்டிலும், பொதுமக்களின் ஒத்துழைப்புதான் அவசியம். இதைச் செயல்படுத்துபவர்கள் அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள்தான். இதில், அவர்களது அர்ப்பணிப்புமிக்க பணியும் அவசியம். வாக்குகள், அந்தந்த வாக்காளரின் உரிமை. அந்த வாக்குகளை, அவர்களுக்கே வசப்படுத்துவதுதான் ஜனநாயகத்தின் வலிமையாக இருக்கும்.