ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள், ஆச்சர்யங்களை உள்ளடக்கியிருந்தது. வழக்கத்தைக் காட்டிலும், கூடுதல் வாக்குச்சதவீதம் பதிவானது மட்டுமல்ல. மொத்தம் உள்ள 87 இடங்களில், மக்கள் ஜனநாயகக் கட்சி(பிடிபி) 28, பாரதிய ஜனதா 25 இடங்களைக் கைப்பற்றி அசத்தியிருந்தன. ஆளுங்கட்சியாக இருந்த உமரின் தேசிய மாநாட்டுக் கட்சி(என்சிபி) 15 இடங்களைத் தான் பெற முடிந்தது. 12 இடங்களைப் பெற்று காங்கிரஸ் 4வது இடம் பிடித்தது.வெற்றியை ருசித்த பா.ஜவுக்கு ஆட்சிக்கனவு ஈடேறவில்லை. என்சிபியுடன் தோழமை கொண்டாலும், பெரும்பான்மை பலம் கிடைக்காது. காங்கிரசுடனும் கைகோர்க்க முடியாது. பிடிபிக்கும் இதேபோன்று சிக்கல். கொள்கைகள் வேறு எனினும், கூட்டாட்சித் தத்துவத்தில், ஒன்றுபட்டாலே உண்டு வாழ்வு.
எதிரி நம்பர் 1 என்சிபி என்ற அடிப்படையில் பிடிபி பா.ஜவுடன் சேர்வதற்குத் தயங்கவில்லை. காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் சட்டத்தின் 370வது பிரிவை நீக்கக்கூடாது. பாதுகாப்புப் படையினரைச் சிறப்பு அதிகாரச் சட்ட அமலாக்கத்தை வாபஸ் பெற வேண்டும் என்று பிடிபி நிபந்தனைகளை விதித்தது. பா.ஜவின் இரும்புக்கரம், பிடிபியிடம் செல்லுபடியாகவில்லை. பிடிபி தலைவர் முப்தி முகமது சயீத், பா.ஜ தலைவர் அமித்ஷா சந்திப்பில் குறைந்தபட்ச செயல் திட்டத்துக்கு ஒப்புக்கொள்ளப்பட்டது.
ஆட்சி அமைக்க முடியாமல், 49 நாள் நீடித்த முட்டுக்கட்டை நீங்கியது. முப்தி முதல்வராகியிருக்கிறார். டெல்லி முதல்வராக கெஜ்ரிவால் பதவியேற்றபோது பிரதமர் மோடியால் பங்கேற்க முடியாமல் போனது. முப்தி பதவியேற்பில் மோடி பங்கேற்றது, கூட்டணி தர்மம். பிடிபி - பாஜ கூட்டணி ஆட்சி, காஷ்மீர் மக்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதற்கான வரலாற்று வாய்ப்பு என்று மோடி கூறினாலும், முட்டுக்கட்டைகள் இல்லாமல் இருக்காது. துணை முதல்வர் நிர்மல்சிங் உள்பட பா.ஜ அமைச்சர்கள் முப்திக்கு ஒத்துழைக்க வேண்டும்.
பா.ஜவைச் சக தோழனாக பிடிபி மதிக்க வேண்டும். அப்போதுதான் கூட்டணி ஆட்சி முழு ஆட்சிக்காலமும் நீடிக்கும். கூட்டணிக்கு வெளியில் எதிரிகள் இல்லை. உள்ளுக்குள் உருவாகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.காஷ்மீரில் தேர்தல் சுமுகமாக நடைபெற பாகிஸ்தான், ஹூரியத் அமைப்பு மற்றும் தீவிரவாதிகள் அனுமதித்தனர் என்று சர்ச்சை பேச்சுடன் முப்தி ஆட்சியைத் துவக்கியுள்ளார். நாக்கு பல நேரங்களில் எதிரி. அனுபவசாலி முப்திக்கு இது தெரியும்.இயற்கையின் சொர்க்கம் காஷ்மீர் என்றாலும், அங்குள்ள மக்களின் வாழ்க்கைத்தரம் சொர்க்கமாகவில்லை. முப்தி செயல் தலைவர் என்று நிரூபிப்பார் என்று நம்பலாம்.