சேலம்: ஓசூர் அருகே ரயில் விபத்துக்கு காரணம் மாவோயிஸ்ட்கள் சதிவேலையா என்பதை கண்டறிய சம்பவ இடத்தில் உயர்மட்ட குழு விசாரணை துவங்கியுள்ளது. தண்டவாள சீரமைப்பு பணி நேற்றிரவு முதல் தொடர்ந்து நடந்து வருகிறது. 1000 பேர் தண்டவாள பதிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் சேலம்- பெங்களூர் மார்க்கத்தில் செல்லும் ரயில்கள் தொடர்ந்து மாற்று பாதையில் இயக்கப்பட்டு வருகிறது.கர்நாடக மாநிலம் பெங்களூரில் இருந்து ஓசூர், சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, பாலக்காடு வழியாக எர்ணாகுளத்திற்கு தினசரி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் (12677) இயக்கப்பட்டு வருகிறது.
இந்த ரயில் நேற்று காலை 7.30 மணியளவில், ஓசூர் அருகே கர்நாடக மாநிலம் ஆனேக்கல் பகுதியில் வந்து கொண்டிருந்த போது திடீரென தடம் புரண்டு கவிழ்ந்தது. இதில், 9 பெட்டிகள் கவிழ்ந்ததில் இடிபாடுகளில் சிக்கி 9 பேர் பலியானார்கள். 70க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.சம்பவ இடத்தில் பெங்களூர் கோட்ட ரயில்வே அதிகாரிகள், பாதுகாப்பு படையினர், கர்நாடக மற்றும் தமிழக போலீசார், தீயணைப்பு வீரர்கள், அரக்கோணம் பேரிடர் மேலாண்மை மீட்பு குழுவினர் ஆகியோர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இரவு வரை இந்த மீட்பு பணி நடந்தது.
இந்த விபத்திற்கு தண்டவாளத்தில் இருந்த பாறை தான் காரணம் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அந்த பாறையில் மோதியதால் ரயில் தடம் புரண்டு கவிழ்ந்தது என ரயில்வே நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அந்த பகுதியில் தண்டவாளம் பெயர்ந்து இருந்ததால், மாவோயிஸ்ட்களின் நாசவேலை காரணமாக ரயில் கவிழ்க்கப்பட்டிருக்குமோ? என்ற சந்தேகத்தின் பேரில் ரயில்வே பாதுகாப்பு படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.இதற்கிடையே விபத்து குறித்து விசாரிக்க தனிக்குழுவை ரயில்வே அமைச்சகம் நியமித்துள்ளது. ரயில்வே பாதுகாப்பு பிரிவு தலைமை ஆணையர் மிட்டல் தலைமையில் ரயில்வே பாதுகாப்பு படை அதிகாரிகள், ரயில்வே போக்குவரத்து பிரிவு பொறியாளர்கள் கொண்ட அக்குழு தங்கள் விசாரணையை இன்று துவங்கியுள்ளது. விபத்து நடந்த இடத்தில் தண்டவாளத்தை சீரமைக்கும் பணி நேற்று இரவு துவங்கியது.
கவிழ்ந்து கிடந்த 6 பெட்டிகளை அப்பகுதியில் ஓரமாக கிரேன் மூலம் தூக்கி வைத்தனர். பின்னர் தண்டவாளத்தை சீரமைக்கும் பணியை துவங்கினர். இப்பணியில் விடிய விடிய 3 ஷிப்ட்டாக பணியாளர்கள் ஈடுபட்டனர். இன்று காலை 1000 ரயில்வே தொழிலாளர்கள் சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர். சீரமைப்பு பணி முடிய இன்று மாலை வரை ஆகும் என ரயில்வே நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயில்கள் எப்போது இயங்கும்?தண்டவாள பராமரிப்பு பணியை மாலைக்குள் முடித்து விடுவதால், அதன்பின் ஓசூர்-பெங்களூர் வழித்தடத்தில் ரயில் இயக்கம் மேற்கொள்ளப்பட உள்ளது. ஏற்கனவே இன்று அதிகாலை மயிலாடுதுறை-மைசூர் எக்ஸ்பிரஸ் (16231), தூத்துக்குடி-மைசூர் எக்ஸ்பிரஸ் (16235), கண்ணூர்-யஸ்வந்த்பூர் வாராந்திர எக்ஸ்பிரஸ் (16528), நாகர்கோவில்-பெங்களூர் எக்ஸ்பிரஸ் (17236), கொச்சுவேலி-யஸ்வந்த்பூர் வாரம் மும்முறை எக்ஸ்பிரஸ் (12258) ஆகிய ரயில்கள் சேலத்தில் இருந்து மாற்று பாதையான திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, பங்காருபேட்டை வழியாக பெங்களூருக்கு இயக்கப்பட்டது.