மதுரை: கண்மாய், கால்வாய்கள் அழிப்பு தொடர்பான தகவல்களை ஊராட்சி உதவி இயக்குனர், மற்றும் 6 வட்டார வளர்ச்சி அலுவலர்கள் (பிடிஓ) சகாயம் முன் ஆஜராகி தெரிவித்தனர்.சென்னை ஐகோர்ட் உத்தரவின்படி, ஐஏஎஸ் அதிகாரி சகாயம், டிசம்பர் 3 முதல் மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள கிராமங்களில் கிரானைட் முறைகேடு தொடர்பாக ஆய்வு செய்து வருகிறார். ஐந்து கட்ட ஆய்வு முடிந்துள்ளது. ஆறாம் கட்ட ஆய்வு பணியை கடந்த 2ம் தேதி துவக்கினார். கிரானைட் முறைகேடு தொடர்பாக முக்கிய தகவல்கள் அடங்கிய ஆவணங்களை மனுவாக கொடுத்தவர்கள் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியிருந்தார். முதல் நாள் பொதுப்பணித்துறை, நிலச்சீர்திருத்த துறை மற்றும் 2 தனியாரிடமும், நேற்று முன்தினம் முருகேசன், முத்தையா, கிருஷ்ணமூர்த்தி ஆகிய 3 பேரிடம் வாக்குமூலம் வாங்கினார்.
மூன்றாம் நாளாக நேற்று விசாரணையில் ஆஜராகுமாறு ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் ரெங்கசாமி மற்றும் கொட்டாம்பட்டி, மேலூர், மதுரை கிழக்கு செல்லம்பட்டி, டி.கல்லுப்பட்டி, திருமங்கலம் ஆகிய 6 ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு சம்மன் அனுப்பி இருந்தார். இதன்படி ஊராட்சி உதவி இயக்குநர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஆறு ஒன்றியத்தின் பொறியாளர்கள் சகாயம் முன் ஆஜராகினர்.
இந்த விசாரணையில், ஒன்றிய அலுவலக கட்டுப்பாட்டில் உள்ள கண்மாய்கள் எத்தனை அழிக்கப்பட்டன. அதில் கிரானைட் எவ்வளவு வெட்டி எடுக்கப்பட்டது. கால்வாய் எத்தனை அழிக்கப்பட்டது. எத்தனை கி.மீ. தூரம் கற்கள் வெட்டப்பட்டுள்ளன. இதன் மீது புகார் கூறப்பட்டதா? அதன்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதா, ஊராட்சி பகுதியில் குடிநீர் ஆதாரத்தின் முந்தைய மற்றும் தற்போதைய நிலை குறித்து பல கேள்விகளை கேட்டுள்ளார். அதற்கான பதிலை அவர்களிடம் பெற்றார். அவை தொடர்பான ஆவணங்களையும் பெற்ற சகாயம் அவர்களிடம் எழுத்து மூலமாகவும் தகவல்களை வாங்கினார்.
விசாரணையை முடித்துக் கொண்ட சகாயம் மதுரையில் இருந்து கார் மூலம் சேலம் சென்று அங்கிருந்து சென்னை சென்றார். தற்போதைய நிலையில் 6ம் கட்ட விசாரணையை சகாயம் முடித்துள்ளார். கடந்த 18 ஆண்டுகளாக வருவாய்த்துறை, கனிமவளத்துறை, பொதுப்பணித்துறை தொல்லியல் துறையில் பணியாற்றிய அதிகாரிகளின் பட்டியலை சகாயம் கேட்டுள்ளதன் மூலம் அடுத்தகட்ட விசாரணையில் இந்தத் துறைகளின் முன்னாள் அதிகாரிகளும் ஆஜராக உள்ளனர் என தெரிய வருகிறது.