சென்னை: சென்னையில் சட்டக் கல்லூரி மாணவர்கள் மீது போலீஸ் தடியடி நடத்தியதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் சட்டக் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.சென்னை அம்பேத்கர் சட்டக்கல்லூரி மாணவர்கள் மீது போலீஸ் தடியடியைக் கண்டித்து மறியல் செய்ய செங்கல்பட்டு அரசு சட்டக்கல்லூரி மாணவர்கள் 200க்கும் மேற்பட்டோர் இன்று காலை செங்கல்பட்டு ரயில் நிலையம் அருகே திரண்டனர். தகவல் அறிந்து செங்கல்பட்டு டவுன் போலீசார் விரைந்தனர். இதையடுத்து மாணவர்கள் அங்கு மறியலில் ஈடுபடாமல் அனைவரும் மின்சார ரயிலில் ஏறி பரணூர் ரயில் நிலையத்தில் இறங்கினர். அங்கு சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை பரணூர் சுங்கச்சாவடியில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். .
தகவல் அறிந்த வந்த போலீசார் மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீசை கண்டித்து மாணவர்கள் கோஷமிட்டனர். இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.இந்த கைது சம்பவத்தை கேள்விபட்டதும் ராட்டினகிணறு அருகே சட்டகல்லூரி மாணவர்கள், செங்கல்பட்டு-மதுராந்தகம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அவர்களையும் போலீசார் கைது செய்தனர். நெல்லையிலும் சட்டக்கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். அவர்கள் நெல்லை-திருச்செந்தூர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அவர்கள் போலீசை கண்டித்து ஆவேசமாக கோஷமிட்டனர். கல்லூரி முதல்வர் சீனிவாசன் மற்றும் போலீஸ் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து மாணவர்கள் கலைந்து சென்றனர்.
கோவையில் இன்று காலை 11.30 மணிக்கு சட்ட கல்லூரி மாணவர்கள் காந்திபுரம் ஜிபி சிக்னல் அருகே திரண்டு ரோட்டில் அமர்ந்து சாலை மறியல் செய்தனர். 35 மாணவிகள் உள்பட 100 பேரை போலீசார் கைது செய்தனர்.மதுரை சட்டக்கல்லூரி மாணவர்கள் இன்று வகுப்புகளைப் புறக்கணித்து, கல்லூரி முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக கிளம்பி மேலூர் ரோட்டில் ராஜாமுத்தையா மன்றம் அருகே மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.தமிழக காவல்துறையை கண்டித்து புதுவையிலும் சட்டக்கல்லூரி மாணவர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். புதுவையில் ராஜா தியேட்டர் சந்திப்பில் மறியல் செய்த அவர்களை போலீசார் கைது செய்தனர்.