2 ஆண்டு தலைமறைவு குற்றவாளி: ஏர்போர்ட்டில் இன்று கைது
மீனம்பாக்கம்: சென்னையை சேர்ந்தவர் நடேசன் (42). தொழிலதிபர். இவர் மீது டெல்லியில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பண மோசடி வழக்கு உள்ளது. இவரை கைது செய்ய போலீசார் தேடி வந்தனர். போலீசாரிடம் சிக்காமல் தலைமறைவாக இருந்து வந்தார். இதையடுத்து அவரை தேடப்படும் தலைமறைவு குற்றவாளி என போலீசார் அறிவித்தனர். மேலும் அவரை பற்றிய முழு விவரங்களையும் இந்தியாவில் உள்ள அனைத்து விமான நிலையங்களுக்கும் கொடுத்து வைத்திருந்தனர்.
இந்நிலையில் இன்று அதிகாலை 3 மணிக்கு துபாயில் இருந்து எம¤ரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானம் சென்னை சர்வதேச விமான நிலையத்துக்கு வந்தது. அதில் வந்த பயணிகளின் பாஸ்போர்ட், விசாக்களை குடியுரிமை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் தொழிலதிபர் நடேசன் வந்தார். அவரது பாஸ்போர்ட், விசாவை சோதனை செய்தபோது தேடப்படும் தலைமறைவு குற்றவாளி என தெரிந்தது. இதையடுத்து அவரை தனி அறையில் அடைத்து வைத்து டெல்லி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள், நடேசனை கைது செய்ய சென்னைக்கு வந்து கொண்டிருக்கின்றனர்.