ஊட்டி: தமிழக அரசு அனுமதியுடன் ஊட்டி அருகே 99 ஏக்கரில் கர்நாடக மாநில தோட்டக்கலைத்துறை சார்பில் பூங்கா அமைக்கப்பட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள பெரும்பாலான சுற்றுலா தலங்கள் அரசு கட்டுப்பாட்டில் உள்ளன. இதில் தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, மரவியல் பூங்கா தோட்டக்கலைத்துறை கட்டுப்பாட்டிலும் தொட்டபெட்டா, ஊட்டி படகு இல்லம், பைக்காரா படகு இல்லம் சுற்றுலாத்துறை கட்டுப்பாட்டிலும் உள்ளது.
இந்த சுற்றுலா தலங்கள் மூலம் தமிழக அரசுக்கு ஆண்டிற்கு பல கோடி ரூபாய் வருமானம் கிடைத்து வருகிறது. இந்நிலையில், ஊட்டி அருகே முள்ளிக்கொரை பகுதியில் கர்நாடக மாநில தோட்டக் கலைத்துறைக்கு சொந்தமான பல ஏக்கர் நிலத்தில் தற்போது பூங்கா அமைக்கும் பணி வேகமாக நடந்து வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன் இதற்கு எதிர்ப்பு கிளம்பவே, பணிகள் தள்ளிப்போனது. ஆனால் தற்போது வேலை வேகமாக நடந்து வருகிறது. ஓரிரு மாதங்களில் இந்த பூங்கா திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஊட்டிக்கு கர்நாடகா மாநில பயணிகளும் அதிகம் வருகின்றனர். இந்தப் பூங்கா தொடங்கப்பட்டால் கர்நாடக பயணிகள் இங்கு செல்ல வாய்ப்புள்ளது. மேலும் கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் பஸ்கள், வாகனங்கள் கூட முதலில் இங்கு வந்து செல்லவே ஏற்பாடு செய்யப்படுவதாக தெரிகிறது.எனவே இப்பூங்கா திறக்கப்பட்டால் தமிழக அரசுக்கு கிடைக்கும் வருவாயில் பெரும் பாதிப்பு ஏற்படும் என்கின்றனர் உள்ளூர்வாசிகள்.இதுகுறித்து நீலகிரி மாவட்ட வருவாய் அலுவலர் நிர்மல்ராஜ் கூறும் போது,
தமிழக மற்றும் கர்நாடக அரசுகளுக்கு இடையே எடுத்த கொள்கை ரீதியான முடிவு காரணமாக மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். பூங்கா அமையும் இடம் கர்நாடக அரசுக்கு சொந்தமானதாக இருந்ததாலும் அரசின் நிர்ப்பந்தம் காரணமாக வேறு வழியின்றி அனுமதி வழங்க வேண்டியதாகி விட்டது என்றார்.தோட்டக்கலை துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், பூங்கா அமைய கர்நாடக அரசுக்கு அனுமதி வழங்கியது மிகப்பெரிய தவறு. ஏற்கனவே ஊட்டியில் தாவரவியல் பூங்கா உள்ளிட்ட பல்வேறு பூங்காக்கள் உள்ளன. அதுவும் 99 ஏக்கர் பரப்பில் அமையும் இந்த பூங்காவில் அனைத்து வகையான வசதிகளையும் ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. குறிப்பாக ரோஜா, கொய்மலர் உள்ளிட்ட பல்வேறு அழகான மலர்களை அமைக்க 2 முதல் 3 ஏக்கர் நிலம் ஒதுக்கி உள்ளதாக கூறப்படுகிறது. இப்பூங்கா உருவானால் தமிழக அரசுக்கு மிகப் பெரிய வருவாய் இழப்பு ஏற்படும்' என்றார்