தூத்துக்குடி: தூத்துக்குடி மார்க்கெட்டுக்கு நெல்லை மாவட்ட கிராமங்கள், ஒட்டன் சத்திரம் மார்க்கெட் உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து தக்காளி விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. தற்போது தக்காளி சீசன் என்பதால் தூத்துக்குடி மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து அதிகமாக உள்ளது. இதன் காரணமாக கடந்த ஒரு வாரமாகவே தக்காளி விலை படிப்படியாக குறைந்து வந்தது.தற்போது தூத்துக்குடி மார்க்கெட்டுகளில் நெல்லை மாவட்டம் பாவூர்சத்திரம், கீழப்பாவூர், ஆலங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் தேனி, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டிலிருந்தும் கூடை கூடையாக தக்காளி பழங்கள் விற்பனைக்காக வந்து குவிந்துள்ளன.
இதன் காரணமாக தக்காளி விலை வீழ்ச்சியடைந்து கிலோ ரூ.6க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் மார்க்கெட்டுகளில் தக்காளியை கூறு போட்டு விற்கின்றனர். இதுபோல கத்தரிக்காய், கேரட் கிலோ ரூ.10க்கும், வெண்டை கிலோ ரூ.15க்கும், பீட்ருட், பாகற்காய் கிலோ ரூ.20க்கும், முள்ளங்கி கிலோ ரூ.15க்கும் விற்கப்படுகிறது. தக்காளியை போல் பிற காய்கறிகளின் வரத்தும் அதிகரித்துள்ளதால் விலை குறைந்துள்ளது. கடைகளில் இவை கூறுகளாக பிரித்து விற்பனை செய்யப்படுகிறது.