புதுடெல்லி: ஆந்திர பிரதேச தொழிற்துறை வளர்ச்சிக்காக ரூ.850 கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. பின்தங்கிய மாவட்டங்களில் செயல்படும் தொழில் நிறுவனங்களின் மேம்பாட்டுக்காக இந்த நிதி பயன்படுத்தப்பட உள்ளது. ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலம் கடந்த ஆறு மாதங்களுக்கு ஆந்திர பிரதேசம், தெலங்கானா என இரண்டாக பிரிக்கப்பட்டது. இந்நிலையில், ஆந்திர பிரதேச மாநிலத்தின் வளர்ச்சிக்கு சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு மத்திய அரசிடம் கோரிக்கை வைத்திருந்தார்.இந்நிலையில், ஆந்திர பிரதேசத்துக்கு முதல்கட்டமாக ரூ.850 கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. தொழிற்துறை வளர்ச்சிக்காக இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆந்திர பிரதேசத்தில் பின்தங்கிய பகுதிகளில் தொழில் நிறுவனங்களை மேம்படுத்த இந்த நிதி பயன்படுத்தப்பட உள்ளது.
மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ள மொத்த நிதியில், ராயலசீமாவில் உள்ள அனந்தபூர், சித்தூர், கடப்பா, கர்னூல் மற்றும் வடக்கு கடற்பகுதியில் உள்ள விசாகப்பட்டினம், விஜயநகரம், ஸ்ரீகாகுளம் ஆகிய 7 பகுதிகளுக்கு என தலா ரூ.50 கோடி வீதம் ரூ.350 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு நிதி ஒதுக்கியதற்கு வரவேற்பு தெரிவித்துள்ள, ஆந்திர பிரதேச அரசு இன்னும் கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளது. ஆந்திர பிரதேச மாநிலத்துக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ள நிலையில், தெலங்கானா மாநிலத்துக்கும் விரைவில் நிதி ஒதுக்கப்பட உள்ளது.