Untitled Document
Tamil Month Rasi Palan Maasi 2013
2015
03
Feb
மன உறுதியால் புற்றுநோயை வெல்வோம் : பிப். 4 - உலக புற்றுநோய் தினம்


புற்றுநோய் என்ற வார்த்தை, நம்மிடையேயும் நம் குடும்பத்தினரிடையேயும் பற்றியெரிய வைக்கும் ஒரு தீப்பந்து. ஒரு வீட்டில் தீப்பற்றிய இடத்தில் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்து கொண்டிருப்போம். ஆனால், அதன் தீப்பொறிகள் மற்ற பகுதிகளுக்கும் பரவிவிடும்.அதுபோல், மனிதனின் உடலில் ஒரு பகுதியில் சிறு கட்டியாக தோன்றும் புற்றுநோய், அதை சரிசெய்வதற்குள், மற்ற உடல் உறுப்புகளுக்கும் பரவி மனிதனை கொல்லும் ஆட்கொல்லி நோயாக கருதப்படுகிறது.உலகளவில் இந்த ஆண்டு வரை புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் 12.5 கோடி பேர். அவர்களில் 7 கோடி பேர் இறந்துவிட்டனர். இந்தியாவில் மட்டும் 1.5 கோடி பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டனர்.அவர்களில் சுமார் 60 லட்சம் பேர் பலியாகி விட்டனர். இந்த எண்ணிக்கை வரும் 2030-ம் ஆண்டில் மேலும் பல மடங்கு உயரும் என்று ஐநா சுகாதார அமைப்பின் புற்றுநோய் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

புற்றுநோய் எதனால் ஏற்படுகிறது, அதன் காரணிகள் என்ன, அவற்றை எவ்வாறு மனஉறுதியோடு எதிர்த்து போராடுவது என்பது குறித்து உலக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, பிப்ரவரி 4-ம் தேதி உலக புற்றுநோய் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.புற்றுநோய் எவ்வாறு ஏற்படுகிறது, அதை எதிர்த்து எப்படி போராடுவது என்பது குறித்து அடையாறு புற்றுநோய் மருத்துவமனை மருத்துவர்களிடம் கேட்டோம். அவர்கள் கூறியதை இங்கே தொகுத்து அளிக்கிறோம்.புற்றுநோய் வருவதற்கான காரணம்: ஒருவருக்கு வரும் டைபாய்டு காய்ச்சலுக்கு ஒரு பாக்டீரியாவை குறிப்பிடுவதைப் போல, புற்றுநோய்க்கு இதுதான் காரணம் என்று எதையும் குறிப்பிட்டு கூறமுடியாது. புற்றுநோய் உருவாவதற்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பல காரணிகள் உள்ளன.

அவை: புகை பிடித்தல், புகையிலை போடுதல், பான்மசாலா சுவைத்தல், மது அருந்துதல் போன்றவை. இதுபோன்ற பல காரணிகளால் நம் உடலில் குடல், மார்பு, இரைப்பை, வாய், நாக்கு, கன்னம், தொண்டை, உணவுக் குழாய் ஆகியவற்றில் புற்றுநோய் கட்டிகள் ஏற்படுகின்றன.திருமணமாகாத பெண்களுக்கும், திருமணமாகி குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்காத பெண்களுக்கும் மார்பக புற்றுநோய் வருகிறது. சிறுவயதிலேயே திருமணம் செய்வது, 35 வயதுக்கு மேல் குழந்தை பெற்றுக் கொள்வது, அடிக்கடி குழந்தைகளை பெறுவது போன்ற காரணங்களால் பெண்களுக்கு கருப்பை, கருப்பை வாய் ஆகியவற்றில் புற்றுநோய் வருகிறது.மேலும், காய்கறி மற்றும் பழங்களின் விளைச்சலை அதிகப்படுத்த பயன்படுத்தப்படும் பலவித பூச்சிக்கொல்லி மருந்துகள், ரசாயனங்கள், நம் உடலில் புற்றுநோய் ஊக்குவிப்பான்களாக செயல்படுகின்றன.

இரும்பு, பித்தளை, அலுமினிய தொழிற்சாலையில் பணியாற்றுபவர்களுக்கும், சாயப்பட்டறை, ரப்பர் தயாரிப்பு, பென்சீன், ஆர்சனிக் போன்ற ரசாயன பொருட்கள் தயாரிப்பவர்களுக்கும் தோல், நுரையீரல், குரல்வளை, ரத்தம் ஆகியவற்றில் புற்றுநோய் ஏற்படுகிறது. இதேபோல், வயதுக்கு மீறிய உடல் பருமனால் வயிற்று உறுப்புகளில் புற்றுநோய் வருவதற்கு வாய்ப்புள்ளது.புற்றுநோய்க்கான அறிகுறிகள்: ஒவ்வொரு புற்றுநோய்க்கும் தனித்தனி அறிகுறிகள் உள்ளன. உடலில் ஏற்படும் கட்டிகள், உடல் எடை குறைதல், தொடர் ரத்தசோகை, தொடர் வயிற்றுப்போக்கு, சிறுநீர் அல்லது மலம் வெளியேறுவதில் மாற்றம் அல்லது ரத்தம் வருதல், காயம் ஆறாமல் இருத்தல், மூக்கிலிருந்து ரத்தம் வருதல், மார்பக கட்டி, நீண்ட கால அஜீரணம் மற்றும் உணவை விழுங்குவதில் சிரமம், உடலில் இருக்கும் மரு அல்லது கட்டி நிறம் மாறுதல் போன்றவை முக்கியமானவை.

புற்றுநோய் உடலில் பரவும் தன்மை:நம் உடலில் புற்றுநோய் 4 நிலைகளில் பரவுவதாக கூறப்படுகிறது. புற்றுநோய் உள்ளது என்பதை கணிக்கும்போதே, அது எந்த அளவில் பரவியுள்ளது என்பதை பரிசோதனைகள் மூலம் தெரிந்து கொண்டு, அதற்கேற்ப சிகிச்சை அளிக்கப்படுகிறது.முதல் நிலையில் புற்றுநோய் கட்டி தொடங்கிய நிலையிலேயே காணப்படும். பின்னர் இரண்டாவது நிலையில் அருகில் இருக்கும் நிணநீர் சுரப்பிக்கு பரவும். மூன்றாம் நிலையில் உடலில் உள்ள பல்வேறு உறுப்புகளுக்கும் நிணநீர் சுரப்பி மூலம் பரவும். நான்காவது மற்றும் இறுதி நிலையில் புற்றுநோயின் தாக்கம் அனைத்து உடல் உறுப்புகளிலும் ஊடுருவிவிடும்.


புற்றுநோய்க்கான பரிசோதனைகள்: ரத்த பரிசோதனை, திசு பரிசோதனை, எக்ஸ்ரே, அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் உள்ளிட்ட பல்வேறு அதிநவீன ஸ்கேன் பரிசோதனைகள், பிராங்கோஸ்கோபி, எண்டோஸ்கோபி, கொலனோஸ்கோபி, பாப் ஸ்மியர் மற்றும் மேமோகிராம் உள்ளிட்ட பலதரப்பட்ட பரிசோதனைகள் புற்றுநோயை கண்டறிய உதவும்.புற்றுநோய் தாக்கும் வயது: கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் 50 வயதுக்கு மேற்பட்ட வயோதிகர்களுக்கு மட்டும்தான் புற்றுநோய் தாக்கம் இருந்தது. ஆனால், இன்றைய மேற்கத்திய கலாசார உணவு முறைகள், உடல் பருமன், உடற்பயிற்சி குறைவு மற்றும் வாழ்க்கை நடைமுறை மாற்றத்தினால் குழந்தைகள் முதல் இளைய தலைமுறையினரையும் புற்றுநோய் பாதித்து வருகிறது.

புற்றுநோய் சிகிச்சைகள்: இன்றைய மருத்துவ உலகில் புற்றுநோய் சிகிச்சைக்கு பல்வேறு அதிநவீன மருத்துவ உபகரணங்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. இன்றைய காலகட்டத்தில் மருந்து சிகிச்சை, அறுவை சிகிச்சை, கதிர்வீச்சு சிகிச்சை, பேலியேட்டிவ் சிகிச்சை போன்றவற்றின் மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது.நோயாளிக்கு வந்துள்ள புற்றுநோய் வகை, இடம், நிலை ஆகியவற்றை பொறுத்து, அதற்கேற்ப பல்வேறு சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டும். சென்னை அரசு பொது மருத்துவ கல்லூரி மருத்துவமனை, அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சி மையம், தமிழகத்தில் காஞ்சிபுரம், வேலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் புற்றுநோய்க்கு இலவச சிகிச்சை அளிக்கப்படுகிறது.

மொத்தத்தில், புற்றுநோய் உயிர்க்கொல்லி நோய் அல்ல. அவை நம் உடலில் பாதிக்கப்பட்ட முதல் நிலையிலேயே மருத்துவமனைக்கு வந்து முறையான சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டும். புற்றுநோயை மனஉறுதியோடு எதிர்த்து போராடி, நம் வாழ்நாளை இன்னும் நீடித்து கொள்ளலாம் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.வட இந்தியாவில் புற்றுநோய் அதிகம் பாதிப்பு உள்ள உத்தரப் பிரதேசம், பீகார் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் இருப்பவர்கள் புதுடெல்லியில் உள்ள சப்தர்ஜங் மருத்துவமனை, ரோட்டரி கேன்சர் மருத்துவமனை, அகில இந்திய மருத்துவ அறிவியல் மருத்துவமனை, டெல்லி மாநில கான்சர் மருத்துவமனை ஆகிய 4 இடங்களில் இலவசமாக சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதற்கு தேவையான அனைத்து மருத்துவ உபகரணங்களும் மத்திய சுகாதார துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகின்றன என்று சப்தர்ஜங் மருத்துவமனையின் ரேடியோதெரபி துறை தலைவர் டாக்டர் கே.டி.பாவ்மில்க் கூறுகிறார்.

ஐயோ... நமக்கு புற்றுநோய் வந்துவிட்டதே, இனி நம் வாழ்க்கை அவ்வளவுதான என்று வீட்டுக்குள் முடங்கிவிடாமல், புற்றுநோயை ஒவ்வொரு கட்டத்திலும் எதிர்த்து போராடி வெற்றி பெறவேண்டும். புற்றுநோயை எதிர்த்து போராடும் குணத்தில் நான் இன்னும் இளம்பெண்ணாகவே கருதுகிறேன் என்று சென்னை அரசு பொது மருத்துவமனை நிகழ்ச்சி ஒன்றில் 87 வயதான குணவதி எனும் மூதாட்டி கூறினார்.மொத்தத்தில், புற்றுநோய் ஏற்படுவதற்கான உணவுமுறை, வாழ்க்கை நடைமுறைகளை நாம் அறவே தவிர்த்து, அப்படியே புற்றுநோய் ஏற்பட்டாலும் அதற்கேற்ற சிகிச்சைகளை மேற்கொண்டு, புற்றுநோயை எதிர்த்து போராடி வெல்ல வேண்டும் என்ற மனஉறுதியை நம்முள் ஏற்படுத்தி கொள்ள வேண்டும்.

கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Health Corner: Current Health News, latest medical news, health news, medical news, medical dictionary, most popular news, hospital, diets, drugs, dental care, bird flu, cancer, mens health, womens health, mental health, health articles, diabetes, medical conditions, health animation, video, Free Online Medical journals, alternative medicine - Dinakaran
 
Advertisement
Advertisement