சார்லி ஹெப்டோவின் சர்ச்சை கார்ட்டூன் வெளியிட்ட அசாம் பத்திரிகை எரிப்பு
கவுகாத்தி: பிரான்ஸ் நாட்டின் பத்திரிக்கையான சார்லி ஹெப்டோ வெளியிட்ட சர்ச்சை கார்ட்டூனை வெளியிட்ட அசாம் பத்திரிகை நகல்கள் எரிக்கப்பட்டன.பிரான்ஸ் நாட்டில் உள்ள சார்லி ஹெப்டோ பத்திரிகை நபிகள் நாயகத்தை கேலி செய்து கார்ட்டூன் வெளியிட்டது. இதனை கண்டித்து பத்திரிகை அலுவலகத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டனர். இதனையடுத்து தீவிரவாதம், கருத்து சுதந்திரம் குறித்த விவாதங்கள் உலகம் முழுவதும் எழுந்துள்ளன. ஒரு தரப்பில் சார்லி ஹெப்டோவை கண்டித்தும், மற்றொரு தரப்பில் தாக்குதலை கண்டித்தும் உலகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.இந்த சூழலில் அசாமில் உள்ள அசோமியா பிரதிதின் என்ற பிரபல நாளேடு சர்ச்சைக்குரிய கார்ட்டூனை வெளியிட்டது.இதனை கண்டித்து ஜமாத் உலேமா இ இந்த் அமைப்பு சார்பில் நேற்று அதன் செயலாளர் மவுலானா காசிமி தலைமையில் போராட்டம் நடைபெற்றது. இதில் நாளேடுகளின் நகல்களை எரித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.