கொழும்பு: இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே வீட்டில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே மீது தற்போது அடுக்கடுக்காக புகார்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. அவரது மகன்கள் மீதும் பல்வேறு சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டது, முறைகேடுகளில் ஈடுபட்டு விலை உயர்ந்த வெளிநாட்டு கார்களை வாங்கி குவித்தது உள்ளிட்ட புகார்களும் எழுந்துள்ளன.இந்நிலையில் ராஜபக்சே மகன்கள் மீதான புகார் மீது நீதிமன்ற உத்தரவின் பேரில் நேற்று போலீசார் அவரது வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர்.
இதுகுறித்து அவரது மகன் நமல் கூறுகையில், தங்கலியில் உள்ள எங்களது வீட்டில் போலீசார் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். லம்போர்கினி என்ற உயர்ரக காரை வாங்கியிருந்ததாக குற்றச்சாட்டு எழுப்பப்பட்டதன் பேரில் இந்த சோதனையை நடத்தினர் என்றார்.இதுகுறித்து காவல்துறை அதிகாரி அஜித் ரோகனா கூறுகையில், நீதிமன்ற உத்தரவின் பேரில் சோதனை நடத்தினோம். ஆனால் அங்கு ஒன்றும் கிடைக்கவில்லை என்றனர்.
மேலும் இதுகுறித்து நமல் கூறுகையில், சோதனையின் போது போலீசார் எங்களை மிகவும் அவமரியாதையாக நடத்தினர். நண்பர்கள் வீட்டிலும் சோதனை நடத்தி அவமானப்படுத்தி வருகின்றனர். இதனால் யாருடைய வீடுகளுக்கும் செல்ல முடியாத நிலை உள்ளது என்றார். ராஜபக்சே வீட்டில் நடத்திய சோதனையை தொடர்ந்து கோத்தபய தலைமையில் நடைபெற்ற வெள்ளை வேன் கொலைகள் குறித்தும் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இதில் பத்திரிகை அதிபர் கொலை தொடர்பாக விசாரணை நடத்த உள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவித்தனர்.
முன்னாள் அமைச்சரும், ராஜபக்சேவின் மற்றொரு சகோதரருமான பசில் மீதும் கடந்த ஆட்சியின் போது நடைபெற்ற திரைமறைவு கொலைகள் குறித்து விசாரணை நடத்தவும் போலீசார் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.மேலும் கடந்த ஆட்சியின் போது கழிவறையில் கூட ஏசி, டிஜிட்டல் டிவி என சொகுசு வாழ்க்கை குறித்தும் விசாரணை நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் தற்போது நடைபெற்று வரும் விசாரணைகள், சோதனைகள் குறித்து தொடர்ச்சியாக முறையான அறிக்கைகளை அதிபரிடம் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளதால் ராஜபக்சே குடும்பத்தினர் மற்றும் அவரால் பயன்அடைந்த முன்னாள் அரசியல் தலைவர்கள் மத்தியில் கலக்கம் ஏற்பட்டுள்ளது.