மதுரை: மதுரையில் இன்று மேலூர் பகுதியில் உள்ள குவாரிகளில் நான்காம் கட்டமாக 2ம்நாள் விசாரணையில் ஈடுபட்ட சகாயத்தின் காலில் விழுந்து, 'உங்களிடம் புகார் மனு கொடுத்ததற்காக என்னை பிடித்துச் சென்று அடித்து, உதைத்து, துப்பாக்கி முனையில் மிரட்டினர்Õ என்று விவசாயி கதறி அழுத சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.சென்னை ஐகோர்ட் உத்தரவின் அடிப்படையில், கிரானைட் முறைகேடு தொடர்பாக கடந்த டிசம்பர் 3 முதல் ஐஏஎஸ் அதிகாரி சகாயம் மதுரை பகுதிகளில் விசாரணை நடத்தி வருகிறார். நான்காம் கட்ட விசாரணை இன்று 2வது நாளாக நடந்தது. இன்று காலை மதுரை மேலூர் பகுதியில் உள்ள எரிச்சியூரில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான மணியன் தெப்பக்குளம் கண்மாயை தனியார் குவாரி நிறுவனத்தினர் அழித்திருந்ததை சகாயம் பார்வையிட்டார். இதுகுறித்து ஆர்டிஓ, செந்தில்குமாரியிடம் சகாயம் விசாரித்தார்.
பொதுப்பணித்துறை அதிகாரிகளை அழைத்து, உங்கள் துறைக்கு புகார்கள் வந்ததா? ஏன் எந்த தடுப்பு நடவடிக்கைகளும் எடுக்கவில்லை? எனக் கேட்டார். அவர்கள், '2007ல் ஒரு புகார் வந்தது, ஆனால் அதன் மீது நடவடிக்கை எடுக்கமுடியவில்லை' என்றனர்.அப்போது இப்பகுதியில் உள்ள வாச்சம்பட்டியைச் சேர்ந்த அய்யங்காளை,'இதுபோன்ற பல புகார்களை பொதுமக்கள் கொடுத்தும், எந்த அதிகாரியும் நடவடிக்கை எடுக்கவில்லை' என்று சகாயத்திடம் தெரிவித்தார். மேலும், 'கடந்த 30ம்தேதி நீங்கள் இப்பகுதியில் ஆய்வு செய்தபோது இந்த அரசு கண்மாய், கால்வாய், மக்கள் நிலம் ஆக்கிரமித்து அழிக்கப்பட்டது தொடர்பாக உங்களிடம் புகார் தெரிவித்தேன். அன்று மாலை மேலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனியப்பன், எஸ்ஐ, அய்யனார் ஆகியோர் என் வீட்டிற்கு வந்து பிஆர்பிக்கு எதிராக நீ பேசக்கூடாது.
ஏன் சகாயத்திடம் புகார் கொடுத்தாய் என்று மிரட்டினர். மேலும், என்னை பிஆர்பிக்கு சொந்தமான ஒரு அலுவலகத்திற்கு கொண்டு சென்று அடித்து காயப்படுத்தி அனுப்பினர். அப்போது என் தம்பி குருசேவ் மகன் கருப்பணன் மீதும் ஆடு திருடியதாக பொய் வழக்குப்போட்டனர். இதைக் கடந்த 3ம்தேதி போய் நான் கேட்டபோது, என்னை நோக்கி துப்பாக்கி காட்டி மிரட்டி இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட போலீசார் விரட்டினர்' எனக் கூறி என்னையும், என் குடும்பத்தையும் காப்பாற்றுங்கள் என சகாயத்தின் கால்களை பிடித்துக் கொண்டு அய்யங்காளை கதறி அழுததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.'என்னிடம் மனு கொடுத்ததற்கு இதுபோன்ற நடவடிக்கைகளில் இறங்கிய போலீசார் மீது உடனே நடவடிக்கை எடுங்கள்' என்று ஆர்டிஓவிடம் சகாயம் கூறினார். தொடர்ந்து இ.மலம்பட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சென்று குவாரிகளை அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.