சாதி, கந்துவட்டி, கவுரவத்திற்காக கொலைகள்: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை : மார்க்சிஸ்ட் கட்சி குற்றச்சாட்டு
நெல்லை: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை. சாதி, கந்துவட்டி, கவுரவத்திற்காகவும் கொலைகள் செய்யப்படுகின்றன என மார்க்சிஸ்ட் கட்சி மாநில செயலாளர் ஜி.ராம கிருஷ்ணன் கூறினார்.இதுகுறித்து நெல்லையில் அவர் அளித்த பேட்டி: பாஜ அரசு நில ஆர்ஜித சட்டத்தை கொண்டுவந்துள்ளது. இச்சட்டம் விவசாயிகளை பெரிதும் பாதிக்கும். இதன் மூலம் அரசு நினைக்கும் இடத்தை கையகப்படுத்த முடியும். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. இதற்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு குறைக்கவில்லை.தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை. சாதி, கந்துவட்டி, கவுரவத்திற்காகவும் கொலைகள் செய்யப்படுகின்றன. இதற்கு காரணம் தமிழகத்தில் செயல்படாத அரசு உள்ளது. இதனால் தான் போக்குவரத்து தொழிலாளர்கள் மூன்று நாள் வேலை நிறுத்தம் செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டனர். உரிய நேரத்தில் தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தால் வேலை நிறுத்தம் நடைபெற்றிருக்காது.
தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. 2004ம் ஆண்டு அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை 52 லட்சமாக இருந்த நிலையில் 2014ம் ஆண்டு 38 லட்சமாக குறைந்துவிட்டது. ஆனால், தனியார் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை 55 லட்சமாக உயர்ந்தது. மாநில அரசு தனியார் பள்ளிகளை ஊக்குவிப்பதே இதற்கு காரணம். இதனால் மாநிலம் முழுவதும் ஆயிரம் அரசு பள்ளிகள் மூடுவிழாவுக்கு தள்ளப்பட்டுள்ளன. மின்சாரம், காப்பீடு திட்டம் போன்றவற்றை மத்திய அரசு தனியாரிடம் தாரை வார்க்கிறது. இதனை மார்க்சிஸ்ட் கட்சி எதிர்த்து போராடி வருகிறது. கூடங்குளம் அணுஉலை திட்டத்தை தொடர்ந்து எதிர்த்து வருகிறோம். சென்னையில் பிப். 16, 19ம் தேதிகளில் மார்க்சிஸ்ட் மாநில மாநாடு நடக்கிறது. இதில் அரசியல் அணுகுமுறை குறித்து தீர்மானிக் கப்படுகிறது.தமிழகத்தில் பாஜ ஒருபோதும் காலூன்ற முடியாது.