மைத்ரிபால அரசுடன் இணைந்து பணியாற்ற அமெரிக்கா விருப்பம்: ஜான் கெர்ரி வாழ்த்து
வாஷிங்டன்: இலங்கையில் புதிய அதிபராக வெற்றி பெற்றுள்ள மைத்ரிபாலவுக்குஅமெரிக்கா வாழ்த்து தெரிவித்துள்ளது. இதுகுறித்து அதன் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் கெர்ரி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ராஜபக்சே தனது தோல்வியை ஒப்புக் கொண்டுள்ளார். புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள மைத்ரிபால தலைமையில் அமைய உள்ள இலங்கையின் புதிய அரசுடன் சேர்ந்து செயல்பட அமெரிக்கா ஆர்வமாக உள்ளது. புதிய அரசின் மூலம் இலங்கையில், ஜனநாயகம் மற்றும் அமைதியை ஏற்பாடு செய்வதற்கான பணிகளில் அமெரிக்கா சேர்ந்து செயல்படும். தேர்தல் முடிவுகளை ராஜபக்சே ஏற்றுக் கொண்டது இலங்கையில் அமைதியான ஆட்சி மாற்றம் நடைபெறுவதற்கான பாரம்பரியத்தை ஏற்றுக் கொண்டது பெருமைக்குரியதாகும்.
மக்களின் முடிவை ராஜபக்சே ஏற்றுக் கொண்டது இலங்கை அரசியலில் சாதகமான முன்னேற்றத்தை காட்டுவதற்கான அறிகுறியாகும். இந்த தேர்தலின் மூலம் இலங்கை மக்கள் அரசியல் குறித்த முக்கிய முடிவுகளை எடுத்துள்ளதாகவே கருத தோன்றுகிறது. இலங்கையில் ஜனநாயக உரிமையான வாக்களிக்கும் உரிமையை ஒவ்வொருவரும் பயன்படுத்தி இந்த முடிவுகளை அளித்துள்ளனர். இலங்கையில் அமைதி நிலவுவதற்கான முயற்சிகள் தொடரும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இலங்கையில் அமைதியான முறையில் தேர்தலை நடத்தி முடித்த இலங்கை தேர்தல் ஆணையாளருக்கு அமெரிக்கா தனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறது என தெரிவித்துள்ளார்.