திருவையாறு: தியாகராஜர் ஆராதனை விழாவில் நாளை பஞ்சரத்ன கீர்த்தனை நடைபெறுகிறது. ஆயிரக்கணக்கான இசைக்கலைஞர்கள் குவிந்துள்ளனர். திருவையாறே விழாக்கோலம் பூண்டுள்ளது.சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜருக்கு ஆண்டு தோறும் தஞ்சை மாவட்டம் திருவையாறில் ஆராதனை விழா நடைபெறும். இந்தாண்டு 168வது ஆராதனை விழா கடந்த 6ம் தேதி துவங்கியது. சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ராமசுப்பிரமணியன் குத்துவிளக்கு ஏற்றி விழாவை துவக்கி வைத்தார்.
பின்னர் தினமும் இரவு பல்வேறு இசைக் கலைஞர்களின் நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன. நேற்றிரவு நடந்த நிகழ்ச்சியில் திரைப்பட பின்னணி பாடகி மஹதி பாடினார். இன்று(9ம் தேதி) இரவு 8 மணிக்கு கத்ரி கோபால்நாத்தின் சாக்ச போன் நிகழ்ச்சி, 8.20க்கு ரவிகிரண் சித்ரவீணை நிகழ்ச்சி, 8.40க்கு டி.எம்.கிருஷ்ணா, 9 மணிக்கு ஓ.எஸ்.அருண் ஆகியோரின் பாட்டு, 9.40க்கு மகாநதி ஷோபனா விக்னேஷ் பாட்டு நிகழ்ச்சி நடக்கிறது.
விழா முக்கிய நிகழ்ச்சியான பஞ்ச ரத்ன கீர்த்தனை நாளை(10ம் தேதி) நடக்கிறது. அதன்படி நாளை காலை 8.30 மணிக்கு தியாகராஜர் வாழ்ந்த இல்லத்திலிருந்து உஞ்ச விருத்தி பஜனை ஊர்வலமாக வந்து விழா பந்தலை 9 மணிக்கு அடைகிறது. இதைதொடர்ந்து விழா பந்தலில் ஆயிரக்கணக்கான கர்நாடக இசை கலைஞர்கள், இசை பாடகர்கள் ஒரே குரலில் பஞ்சரத்ன கீர்த்தனைகள் பாடி தியாகராஜருக்கு இசை அஞ்சலி செலுத்துகின்றனர். அப்போது தியாகராஜர் உருவ சிலைக்கு அபிஷேகம் நடைபெறும். தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் பங்கேற்கிறார். தொடர்ந்து இசைநிகழ்ச்சி நடக்கிறது.
இரவு 7 மணிக்கு சீர்காழி சிவசிதம்பரம் பாடுகிறார். இரவு 8 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட முத்து பல்லக்கில் தியாகராஜர் வீதியுலா நடக்கிறது. 9 மணிக்கு தேசிய நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 9.30 மணிக்கு சுதா ரகுநாதன் பாடுகிறார். 10.15 மணிக்கு மாம்பலம் சிவா, சந்தானம் ஆகியோரின் நாதஸ்வர நிகழ்ச்சி நடக்கிறது. பின்னர் ஆஞ்சேநேயர் உற்சவத்துடன் விழா நிறைவடைகிறது. இன்றும், நாளையும் நிகழ்ச்சிகள் நடத்தும் இசை கலைஞர்கள் இன்று திருவையாறு வந்தனர். இசை ரசிகர்களும் வந்துள்ளனர். இதனால் திருவையாறு நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது.