புதுடெல்லி: அரசு விளம்பரங்களில் அரசியல் இருக்க கூடாது என்றும், ஜனாதிபதி மற்றும் பிரதமரின் பெயர்களே இடம்பெற வேண்டும் என உச்ச நீதிமன்றம் அமைத்த சிறப்புக்குழு பரிந்துரை செய்துள்ளது. அரசு சார்பில் வெளியிடப்படும் விளம்பரங்கள் அரசியல் ஆதாயத்துக்காக பயன்படுத்தப்படுவதாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இதுதொடர்பான விதிமுறைகளை வகுக்க சிறப்பு குழு ஒன்றை அமைத்தது. இந்த குழுவில் கல்வியாளர் மாதவ் மேனன், சொலிசிட்டர் ஜெனரல் ரஞ்சித் குமார், மூத்த வக்கீல் விஸ்வநாதன் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். அரசு விளம்பரங்களில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து இக்குழு பல்வேறு பரிந்துரைகளை அளித்துள்ளது.
மத்திய அரசு விளம்பரங்களில் அரசியல் சாயம் இருக்க கூடாது. கட்சி பெயர், சின்னம் மற்றும் அமைச்சர்களின் படங்கள் ஆகியவை இடம்பெற கூடாது. ஜனாதிபதி, பிரதமர் அல்லது முதல்வர், கவர்னர் ஆகியோரின் பெயர்கள் மட்டுமே அரசு விளம்பரங்களில் இடம்பெற வேண்டும். அரசியல் கட்சியை சேர்ந்த தலைவர்களின் பிறந்தநாள் மற்றும் நினைவுநாள் குறித்த விளம்பரங்களை தவிர்க்க வேண்டும். முக்கிய தலைவர்களுக்கு மட்டுமே விளம்பரங்கள் கொடுக்க வேண்டும். இதற்கான பட்டியலை முன்கூட்டியே தயார் செய்ய வேண்டும். அந்த பட்டியலில் இடம்பெற்றவர்களுக்கு மட்டுமே விளம்பரம் கொடுக்க வேண்டும்.
அரசியல் ஆதாயத்துக்காக மக்கள் வரிப்பணத்தை வீணடிக்க கூடாது. சேவை மனப்பான்மையுடன்தான் விளம்பரங்கள் கொடுக்கப்பட வேண்டும். அரசு விளம்பரங்கள் குறித்த விதிமுறைகளை முறைப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிறப்பு குழு பரிந்துரை செய்துள்ளது.சிறப்பு குழு பரிந்துரை செய்த அறிக்கை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. குழுவின் பரிந்துரை குறித்து மத்திய அரசு உரிய பதில் அளிக்க வேண்டும் என நீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது.