புதுடெல்லி: பிரதம மந்திரியின் ஜன்தன் யோஜனா திட்டம் கடந்த ஆகஸ்டு மாதம் தொடங்கப்பட்டது. அரசின் நலத்திட்டங்கள் ஏழை மக்களை நேரடியாக சென்று சேரவும், தொழில் துவங்க எளிதில் கடன் பெற வழிவகை செய்யும் வகையில் இத்திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த திட்டத்தின்கீழ், கடந்த செப்டம்பர் மாதம் வரை நாடு முழுவதும் சுமார் 3 கோடி பேர் வங்கிக் கணக்கு தொடங்கியுள்ளனர். 2016ம் ஆண்டுக்குள் சுமார் 10 கோடி பேரை சேர்க்க இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்நிலையில், திகார் சிறையில் உள்ள கைதிகள் பயன்பெறும் வகையில், ஜன்தன் யோஜனா திட்டத்தின் மூலம் அவர்களுக்கு வங்கி கணக்கு தொடங்கப்பட உள்ளது.
டெல்லியில் உள்ள திகார் சிறையில் தற்போது சுமார் 4000 கைதிகள் வரை உள்ளனர். இங்கு கைதிகளை நல்வழிப்படுத்தும் வகையில் யோகா கற்றுத்தரப்படுகிறது. இதேபோல், சிறு தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டு கைதிகளுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படுகிறது. தொழிற்பயிற்சிகளும் அளிக்கப்பட்டு வருகின்றன. இதுபோன்று பல்வேறு திட்டங்களை திகார் சிறை நிர்வாகம் செய்து வருகிறது.அந்தவகையில், சிறை யில் நீண்டநாட்களாக இருக்கும் குற்றவாளிகள், விசாரணை கைதிகளுக்கு ஜன்தன் யோஜனா திட்டத்தின் கீழ், வங்கி கணக்கு தொடங்கப்பட உள்ளது. அதற்கான முதல்கட்ட நடவடிக்கைகளை அதிகாரிகள் செய்து வருகின்றனர். சிறையில் கைதிகள் செய்யும் வேலைக்கான ஊதியத்தை, விரைவில் தொடப்பட உள்ள வங்கி கணக்கில் டெபாசிட் செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.