கருணாநிதி படம் ஊழியர்களை இடமாற்ற தடை
சென்னை: கருணாநிதியின் படத்தை நுகர்பொருள் வாணிபக்கழகத்தில் வைத்த ஊழியர்களை பணி இடமாற்றம் செய்ததற்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடைவிதித்துள்ளது.புதுக்கோட்டை மாவட்ட நுகர்பொருள்வாணிப கழக ஊழியர்கள் 3 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்திருந்த வழக்கில், முன்னாள் முதல்வர்களின் படங்களை அரசு அலுவலகங்களில் வைக்கலாம் என்று அரசு உத்தரவு உள்ளதாகவும் அதன்படி நுகர்பொருள் வாணிப கழக அலுவலகத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் படத்தை வைத்ததாக தெரிவித்துள்ளனர்.
ஆனால் இதுதொடர்பான உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தூண்டுதலின் பேரில் தங்களை பணியிடமாற்றம் செய்துள்ளதாகவும் எனவே அதற்கு தடை விதிக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தனர்.வழக்கை விசாரித்த நீதிபதி ஹரி பரந்தாமன் மூன்று பேரின் பணிஇடமாற்றத்திற்கு தடைவிதித்தார். மேலும், இதுகுறித்து இரண்டு வார காலத்திற்குள் உணவுத்துறை அமைச்சர் காமராஜ், நுகர்பொருள் வாணிபக்கழக நிர்வாக இயக்குனர் ஆகியோர் பதிலளிக்கும்படியும் உத்தரவிட்டுள்ளார்.