குதிரை பந்தய ஆசையிலிருந்தும், சினிமா ஆசையிலிருந்தும் மீள்வது கடினம் என்பார்கள். பூவே உனக்காக, கண் திறந்து பாரம்மா, ரத்னா போன்ற படங்களில் நடித்தவர் சங்கீதா. இவர் ஒளிப்பதிவாளர் சரவணனை மணந்து கொண்டு சினிமாவை விட்டு ஒதுங்கினார். கடைசியாக மேரி ஆல்பட் படத்தில் கடந்த 2003ம் ஆண்டு நடித்திருந்தார். அதன்பிறகு முழுகவனத்தையும் குடும்பத்தின் பக்கம் திருப்பி இருந்தார். சமீபகாலமாக ஜோதிகா, அபிராமி, மஞ்சு வாரியர், கனிகா என திருமணம் ஆன நடிகைகள் மீண்டும் நடிப்புக்கு திரும்பி இருக்கின்றனர். இவர்களைப் பார்த்ததும் சங்கீதாவுக்கும் மறுபடியும் நடிப்பாசை வந்துவிட்டது.
தமிழ் பட வாய்ப்புகளுக்கு தூதுவிட்டு பார்த்தார் பலனில்லை. மலையாளத்தில் அவரது முயற்சி கைகொடுத்திருக்கிறது. ‘நகரவருதி நடுவில் நிஜன்' என்ற படத்தில் நடிகர் சீனிவாசன் ஜோடியாக சங்கீதா நடிக்கிறார். இதுபற்றி அவர் கூறும்போது,‘சினிமாவில் எனக்கு நண்பர்களோ, தோழிகளோ அதிகம் கிடையாது. எனது சிறுவயது முதல் இன்றுவரை உள்ள ஒரேதோழி இந்திரஜா. அவருடன் மட்டும்தான் நான் தொடர்பில் இருக்கிறேன். நல்ல கதாபாத்திரங்களில் மட்டுமே நடிப்பது என்ற பாலிசியை ஹீரோயினாக நடித்தபோதே பின்பற்றினேன். இனியும் அப்படித்தான்' என்றார்.