'உலக சினிமாவை பார்த்தால் மட்டும் போதாது' இயக்குனர் மகேந்திரன் தாக்கு
12வது சென்னை சர்வதேச திரைப்பட விழா நேற்று தொடங்கியது. வரும் 25ம் தேதி வரை நடக்கும் இவ்விழாவை தமிழக அமைச்சர் ராஜேந்திரன் பாலாஜி தொடங்கி வைத்தார். 50 நாடுகளை சேர்ந்த 170 படங்கள் திரையிடப்படுகின்றன. விழாவில் இயக்குனர் மகேந்திரன் பங்கேற்று பேசியபோது,‘உலக சினிமா என்பது வேறு. சினிமா உலகம் என்பது வேறு. உலக சினிமாவைபற்றி தெரிந்த எனக்கு சினிமா உலகைப்பற்றி தெரியாது. இதுவே எனக்கு பலமாகவும், பலகீனமாகவும் இருக்கிறது. இப்போதும் நமது படங்களில் லவ் டூயட் பாடிக்கொண்டு, குரூப் குரூப்பாக ஆடிக்கொண்டிருக்கும் படங்களைத்தான் எடுக்கிறோம். இதற்காக வர்த்தக ரீதியிலான படங்களை குறை சொல்கிறேன் என்று அர்த்தமல்ல. அந்த சினிமாவை தவிர்த்து மற்ற படங்களை உலக தரத்துக்கு நமது கலாசாரம், சமூக பொறுப்புடன் ஏன் எடுக்கக்கூடாது. இது நம்மால் முடியும்'என்றார். நடிகர் சங்க தலைவர் சரத்குமார், இயக்குனர்கள் பி.வாசு, கேயார், நடிகைகள் சுகாசினி, ஜெயஸ்ரீ, கனிகா, அபர்ணா, லிசி, பூர்ணிமா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இந்தோ சினி அப்ரிஷியேஷன் தலைவர் கண்ணன் வரவேற்றார். செயலாளர் தங்கராஜ் நன்றி கூறினார்.