புழல் சிறை வளாகத்தில் ஜாமீனில் வருபவரை கொல்ல ஆயுதங்களுடன் பதுங்கிய கும்பல் ஒருவர் கைது: 4 பேருக்கு வலை
புழல்: புழல் மத்திய சிறை வளாகத்தில் வந்திருந்த சில கார்களை சந்தேகத்தின் பேரில் போலீசார் இன்று சோதனை செய்து கொண்டு இருந்தனர். அப்போது அங்கே நின்று கொண்டு இருந்த ஒரு காரை போலீசார் சோதனை செய்ய முயன்றனர். போலீசார் வருவதை அறிந்து கொண்ட தனியார் நிறுவன காரில் இருந்த 5 பேர் கொண்ட கும்பல் மின்னல் வேகத்தில் தப்பி ஓடியது. சுதாரித்துக் கொண்ட போலீசார் அவர்களை பின் தொடர்ந்து விரட்டி சென்றனர். சிறிது தூரத்தில் வைத்து ஒருவரை மட்டும் போலீசார் சுற்றி வளைத்து மடக்கி பிடித்தனர். 4 பேர் கொண்ட கும்பல் அங்கியிருந்து மாயமானது. பிடிபட்ட வாலிபரை போலீசார் காவல் நிலையத்திற்கு கொண்டு விசாரித்தனர்.
விசாரணையில், பிடிபட்ட நபர் புழல் கண்ணப்பசாமி நகரை சேர்ந்த கார் டிரைவர் லோகநாதன்(48) என்று தெரியவந்தது. பின்னர் அவர் கொடுத்த தகவலின்படி காரில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த 5 பட்டா கத்திகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இன்று சிறையில் இருந்து ஜாமீனில் வெளி வரும் ஒரு நபரை சிறை வளாகத்தியிலேயே வைத்து தீர்த்து கட்ட கும்பல் முடிவு செய்துள்ளது. அதற்காக அவர்கள் பதுங்கியிருந்தனர் என்ற திடுக்கிடும் தகவல் தெரியவந்துள்ளது. இதனை அடுத்து லோகநாதன் மீது போலீசார் வழக்கு பதிந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பி ஓடிய 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.