காரைக்கால்: நாளை மறுநாள் சனிப்பெயர்ச்சிக்கு பிந்தைய முதல் சனிக்கிழமையையொட்டி மீண்டும் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் வருவார்கள் என்பதால் திருநள்ளாறு நளன் குளம் சுத்தப்படுத்தப்பட்டு புதிய தண்ணீர் நிரப்பி தயார் நிலையில் உள்ளது. புதுவை மாநிலம் காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறில் உள்ள தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் (சனி பகவான் கோயில்) நேற்று முன்தினம் சனி பெயர்ச்சி விழா நடந்தது. 5 லட்சம் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். சனி பெயர்ச்சிக்கு 45 நாட்களுக்கு முன்னும், பின்னும் சனி பகவானை தரிசனம் செய்யலாம் என்பது ஐதீகம். அந்த வகையில் இன்னும் 45 நாட்கள் வரை திருநள்ளாறு சனி பகவானை தரிசனம் செய்யலாம்.
குறிப்பாக நாளை மறுநாள் சனிப்பெயர்ச்சிக்கு பின் வரும் முதல் சனிக்கிழமை சுமார் 2 லட்சம் பக்தர்கள் வருவர் என எதிர்பார்க்கப்படுகிறது. அனைத்து அடிப்படை வசதிகளையும் இன்னும் ஓரிரு வாரங்களுக்கு நடைமுறைப்படுத்த கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. சனி பெயர்ச்சி அன்று நளன் குளத்தில் பக்தர்கள் புனித நீராடும் போதே, தண்ணீர் வெளியேற்றப்பட்டு புதிய தண்ணீர் விடப்பட்டு வந்தது. 100க்கும் மேற்பட்ட ஊழியர்கள் குளத்தின் படிக்கட்டு, தண்ணீருக்கு அடியில் போடப்பட்ட ஆடைகளை உடனுக்குடன் அப்புறப்படுத்தினர். அன்று நள்ளிரவு 12 மணிக்கு மேல் விடிய, விடிய குளத்தில் கிடந்த ஆடைகள் மற்றும் எண்ணெய், சீயக்காய், சோப்பு பாக்கெட்டுகள் அனைத்தும் அகற்றப்பட்டு குளத்தை பளிச்சென மாற்றியுள்ளனர். அதேபோல் அழுக்கு தண்ணீர் வெளியேற்றப்பட்டு புதிய தண்ணீர் விடப்பட்டு தயார் நிலையில் உள்ளது.