திருமலை: திருப்பதியில் 6 மாடி கொண்ட ஷாப்பிங் மால் தீப்பிடித்து எரிந்தது. இதில் ரூ.8 கோடி மதிப்புள்ள ஜவுளி உள்ளிட்ட பொருட்கள் எரிந்து சாம்பலாயின. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். திருப்பதியில் உள்ள தீர்த்தகட்ட வீதியில் தனியாருக்கு சொந்தமான 6 மாடி கொண்ட ஷாப்பிங் மால் உள்ளது. இங்கு நகைக்கடை, ஜவுளிக் கடை, ரெடிமேடு கடை உள்ளிட்ட பல்வேறு வியாபார நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.இப்பகுதி மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை இந்த கடைக்கு சென்று ஒரே நேரத்தில் வாங்கிச்செல்வது வழக்கம். கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் பண்டிகை வருவதால் இங்குள்ள ஜவுளி, நகைக்கடைகளில் புதுப்புது ரகங்களில் சரக்குகள் வரவழைக்கப்பட்டு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தன.
நேற்றிரவு வழக்கம்போல் வியாபாரம் முடிந்து கடைகளை அதன் உரிமையாளர்கள் பூட்டி விட்டு சென்றனர். இந்நிலையில் நள்ளிரவில் ஷாப்பிங் மாலில் இருந்து குபுகுபுவென புகை வருவதை கண்டு இரவு பணியில் ஈடுபட்டிருந்த காவலாளி அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டார். உடனடியாக அவர் இதுகுறித்து திருப்பதி மேற்கு காவல்நிலையம், தீயணைப்பு படை மற்றும் ஷாப்பிங் மால் உரிமையாளருக்கு தகவல் கொடுத்தார். இதற்கிடையில் 6மாடி கொண்ட ஷாப்பிங் மால் முழுவதும் தீப்பிடித்து எரிந்தது.இதையடுத்து திருப்பதி, திருமலை, புத்தூர், நகரி ஆகிய இடங்களில் இருந்து 6 தீயணைப்பு வாகனங்களில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த வீரர்கள் தீயை அணைக்க போராடினர். 6 மாடி கொண்ட கட்டிடம் என்பதால் தீயை உடனடியாக அணைக்க முடியவில்லை.
இந்நிலையில் 7மணி நேர போராட்டத்துக்கு பின்னர் இன்று காலை 6மணியளவில் தீ முற்றிலுமாக அணைக்கப்பட்டது. இந்த தீ விபத்தில் ரூ. 8 கோடி மதிப்புள்ள ஜவுளி ரகங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் எரிந்து சாம்பலாயின. கீழ் தளத்தில் செயல்பட்டு வந்த ஜூவல்லரி கடைகளில் இருந்த தங்க நகைகள் லாக்கரில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்ததால் தப்பி இருக்கலாம் என கூறப்படுகிறது.நாசவேலையால் இந்த தீ விபத்து ஏற்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து திருப்பதி மேற்கு காவல் நிலைய போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.திருப்பதியில் 6மாடி கொண்ட ஷாப்பிங் மால் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.