சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கை:பாகிஸ்தான், பெஷாவர் நகரில் பள்ளிக் குழந்தைகளைப் படுகொலை செய்த கொடூரம் உலகையே அதிரவைத்துள்ளது. ஈவிரக்கமின்றி ஆயுதம் தாங்கிய ஒரு கும்பல் காட்டுமிராண்டித்தனமாகத் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் சுமார் 150 குழந்தைகளுக்கு மேலாகப் பலியாகியுள்ளனர். இந்த வன்முறை வெறியாட்டத்திற்கு தலிபான் இயக்கத்தைச் சார்ந்தவர்கள் வெளிப்படையாகப் பொறுப்பேற்றுள்ளனர். தங்கள் இயக்கத்தின் மீது பாகிஸ்தான் ராணுவமும் அமெரிக்கப் படையும் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதை எதிர்க்கும் வகையில் இக்கொடூரத்தைச் செய்திருப்பதாக அறிவித்து இருக்கிறார்கள். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
உலகம் முழுவதும் இத்தகைய பயங்கரவாதப் போக்குகள் தலைதூக்குவதற்கு அமெரிக்க வல்லரசின் மேலாதிக்க வெறியே அடிப்படைக் காரணமாக உள்ளது. அரபு நாடுகளின் எண்ணெய் வளத்தைக் குறிவைத்துக் காய்களை நகர்த்திவரும் அமெரிக்க ஏகாதிபத்திய அரசு தலிபான், அல்கய்தா போன்ற அமைப்புகளை உருவாக்கி, அவற்றின் மீது முஸ்லிம் பயங்கரவாதம் என முத்திரைக் குத்தி, முஸ்லிம் நாடுகளின் இறையாண்மைக்குள் தலையிட்டு வருகிறது.இந்தப் போக்கை இந்தியா போன்ற வளரும் நாடுகள் புரிந்துகொண்டு மதச்சார்பின்மைக் கோட்பாட்டை நிலைநாட்ட உறுதி ஏற்க வேண்டும். பாகிஸ்தானில் நடைபெற்றுள்ள இந்தக் கொடூரத்தை மேலும் தொடரவிடாமல் தடுப்பதற்கு சர்வதேச அளவில் ஜனநாயக சக்திகள், மதச்சார்பற்ற சக்திகள் உடனடியாக அணிதிரள வேண்டும்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.